துருக்கி ஹோட்டலில் தீ; பதின்மர் மரணம்

துருக்கி ஹோட்டலில் தீ; பதின்மர் மரணம்

2 mins read
d7f2eacc-7744-4901-9879-070088fbd458
ஹோட்டலின் நான்காவது மாடியில் உள்ள உணவகத்தில் தீ மூண்டதாகவும் அங்கிருந்து அது மற்ற மாடிகளுக்குப் பரவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பொலு நகரின் ஆளுநர் அப்துல் ஐதீன் தெரிவித்தார். - படம்: ஏஎஃப்பி

இஸ்தான்புல்: துருக்கியில் உள்ள பனிச்சறுக்கு உல்லாசத்தலம் ஒன்றில் இருக்கும் ஹோட்டல் தீப்பிடித்து எரிந்ததில் பத்துப் பேர் மாண்டுவிட்டதாகவும் 32 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.

தீயிலிருந்து தப்பிக்க சன்னல் வழியாகக் கீழே குதித்த குறைந்தது இருவர் உயிரிழந்ததாகத் துருக்கிய ஊடகம் செய்தி வெளியிட்டது.

துருக்கிய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு அந்த 12 மாடி கிராண்ட் கர்த்தால் ஹோட்டலில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விடுமுறை காலம் என்பதால் அந்த ஹோட்டலில் 234 பேர் தங்கியதாக அதிகாரிகள் கூறினர்.

ஹோட்டலின் நான்காவது மாடியில் உள்ள உணவகத்தில் தீ மூண்டதாகவும் அங்கிருந்து அது மற்ற மாடிகளுக்குப் பரவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பொலு நகரின் ஆளுநர் அப்துல் ஐதீன் தெரிவித்தார்.

தீ பரவியபோது விருந்தினர்கள் அவர்களது அறைகளில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனரா என்பதை கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்று வருகிறது.

பொலு நகர மையத்திலிருந்து ஹோட்டல் தூரமாக இருப்பதாலும் கடுங் குளிருடனான பனிக்காலம் என்பதாலும் தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்தை அடைய ஒரு மணி நேரத்துக்கும் மேலானதாக ஆளுநர் அப்துல்அசிஸ் குறிப்பிட்டார்.

காலை நேரத்திலும் மீட்புப் பணிகள் தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மீட்புப் பணியிலும் தீயணைப்புப் பணியிலும் 267 பேர் ஈடுபட்டு வருவதாக உள்துறை அமைச்சர் கூறினார்.

ஹோட்டலிலிருந்து கரும் புகை வெளியேறியதாகவும் சன்னல் ஓரம் நின்றுகொண்டு பலர் உதவி கேட்டு அலறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 20லிருந்து 25 பேர் சன்னல் வழியாக மீட்கப்பட்டனர்.

தீச்சம்பவத்தின் காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்