அலோர் ஸ்டார்: தீபாவளியன்று அதிகாலையில், மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள கூலிம் நகரில் பட்டாசுகள் வெடித்ததில் ஆடவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
மேலும் 21 பேர் காயமடைந்தனர். அவர்களில் பங்ளாதேஷியர் ஒருவரும் அடங்குவார்.
திங்கட்கிழமை (அக்டோபர் 20) அதிகாலை 12.45 மணி அளவில் வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூலிம் காவல்துறைத் தலைவர் ஸுல்கிஃப்லி அசிசான் கூறினார்
வெடிப்பின் காரணமாகப் படுகாயம் அடைந்தவரின் நெற்றியில் 5 சென்டிமீட்டர் நீளத்தில் சிராய்ப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எஞ்சிய 21 பேருக்கு இலேசான தீக்காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, அவர்களது கைகளில் பாதிப்பு ஏற்பட்டதாகத் திரு ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
பட்டாசு வெடிப்பு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இருவரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) கூலிம் அருகே கைது செய்யப்பட்டனர்.
அந்த இரு சந்தேக நபர்களும் சம்பவ இடத்தில் தங்கள் நண்பர்களுடன் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்களில் ஒருவர் மதுபோதையில் இருந்தார். ‘கெலாப்பா’ எனும் ஒருவகை பட்டாசுகளை அவர் 200 ரிங்கிட்டுக்கு ஒரு கடையிலிருந்து வாங்கினார்,” என்று திரு ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியிலிருந்து திங்கட்கிழமை அதிகாலை 2 மணி வரை குற்றத் தடுப்பு காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
சம்பவ இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அவர்கள் தகவல் அளித்ததாகக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஸுல்கிஃப்லி கூறினார்.
போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க அவர்கள் உதவி கேட்டதாகவும் அதிகாரிகள் அவ்விடத்தை அடைந்தபோது பலர் அங்கு ஒன்றிகூடியிருந்தது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அங்கு கூடியிருந்த சிலருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது.
பட்டாசு வெடிப்பின் காரணமாகக் காயங்கள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்றார் திரு ஸுல்கிஃப்லி.
சம்பவ இடத்துக்கு இரண்டு மருத்துவ வண்டிகள் விரைந்தன. மருத்துவ உதவியாளர்கள் காயமடைந்தோருக்கு முதலுதவி வழங்கினர்.
பொதுமக்களில் சிலர் சாலையோரத்தில் பட்டாசுகளைக் கொளுத்திப்போட்டபோது வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிகாலை 1.30 மணிக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் சம்பவ இடத்தில் போக்குவரத்து வழக்கநிலைக்குத் திரும்பியதாகவும் திரு ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.

