ஹூஸ்டன்: தனது முன்னாள் காதலியையும் அவரது காதலனையும் கொன்ற குற்றத்திற்காக 55 வயதான சார்லஸ் விக்டர் தாம்சனுக்கு புதன்கிழமை (ஜனவரி 28) டெக்சஸ் மாநிலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2026ல் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட முதல் மரண தண்டனை இது.
நச்சு ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்ட சார்லஸ் தாம்சன் மாநிலச் சிறையில் மாலை 6.50 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் வியாழன் காலை 8.50 மணி) இறந்துவிட்டதாக டெக்ஸஸ் நீதித்துறை தெரிவித்துள்ளது.
தனது முன்னாள் காதலி திருவாட்டி டெனிஸ் ஹேஸ்லிப், 39, அவரது காதலன் திரு. டேரன் கெய்ன், 30 இருவரையும் 1998ல் கொலை செய்ததற்காக தாம்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஹூஸ்டன் புறநகர் பகுதியில் திருவாட்டி ஹேஸ்லிப்பின் இல்லத்தில் இருவரையும் தாம்சன் சுட்டுக்கொன்றார்.
2025ல் அமெரிக்காவில் 47 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. அது, 2009ஆம் ஆண்டின் 52 மரண தண்டனை நிறைவேற்றத்துக்குப் பிறகான ஆக அதிகமான எண்ணிக்கையாகும்.
ஆக அதிகமாக ஃபுளோரிடா 19 மரணதண்டனைகளை நிறைவேற்றியது.
2025ன் மரண தண்டனையில் 39 ஊசி மூலம் நிறைவேற்றப்பட்டன. மூவர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். ஐவர் நைட்ரஜன் ஹைபோக்ஸியா மூலம் இறந்தனர். அதில் ஒருவரின் முகக் கவசத்துக்குள் நைட்ரஜன் வாயு செலுத்தப்படும். அதனால் அவர் மூச்சுத்திணறி உயிரிழப்பார். இந்த முறை கொடூரமானது என்றும் மனிதாபிமானமற்றது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் கண்டித்துள்ளனர்.
அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 23ல் மரண தண்டனை இல்லை. அதேநேரத்தில் கலிஃபோர்னியா, ஆரெகன், பென்சில்வேனியா ஆகிய மூன்று மாநிலங்களில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மரண தண்டனையை ஆதரிப்பவர். மோசமான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க அவர் கோரியுள்ளார்.

