சிட்னி: சிட்னியில் திறக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்திலிருந்து முதல் அனைத்துலக விமானம் திங்கட்கிழமை (அக்டோபர் 26) காலை புறப்பட்டது.
ஆக்லாந்திலிருந்து வந்த ஏர் நியூசிலாந்து விமானம் ஒன்று காலையில் தரையிறங்கி, சிறிது நேரத்தில் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
ஆஸ்திரேலியாவின் மேற்கு வட்டாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் சிட்னி புறநகரில் அந்த விமான நிலையம் அமைந்துள்ளது.
நகரின் நடுப்பகுதியில் நூற்றாண்டைக் கடந்து செயல்பட்டுவரும் விமான நிலையத்திற்கு மாற்றாகப் புதிய விமான நிலையம் கட்டப்பட வேண்டும் என ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.
அந்தத் திட்டம் நிறைவேறி ‘மேற்கு சிட்னி அனைத்துலக விமான நிலையம்’ உருவாகி உள்ளது.
இதன் மூலம், உழைக்கும் வர்க்கத்தினர் அதிகமானோர் வசிக்கும் சிட்னியின் மேற்குப் புறநகர்ப் பகுதிகளுக்கு வாரத்திற்கு மூன்று விமானச் சேவைகள் கிடைக்கும்.
ஒரே ஓடுபாதையைக் கொண்ட இந்தப் புதிய விமான நிலையம், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட முதல் முக்கிய விமானப் போக்குவரத்து நிலையமாகும். இங்கு ஜூலை மாதம் சரக்குப் போக்குவரத்துச் செயல்பாடுகளும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) உள்நாட்டு விமானச் சேவைகளும் தொடங்கின.
சிட்னியின் முதன்மை விமான நிலையமான கிங்ஸ்போர்டு ஸ்மித், ஆஸ்திரேலியாவில் அதிகச் சுறுசுறுப்பாக இயங்கும் விமான நிலையமாகும். அங்க மூன்று விமான ஓடுபாதைகள் உள்ளன. கடந்த ஆண்டு ஏறத்தாழ 42 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் அந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தினர்.
