டெஹ்ரான்: ஈரான் போர் தொடங்கி, ஏறக்குறைய ஒன்றரை மாத காலத்திற்குப் பிறகு பயணிகள் கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை சனிக்கிழமை (ஏப்ரல் 18) அதிகாலை முதன்முதலாகக் கடந்துள்ளது.
மால்டா நாட்டுக்கொடியுடன் பயணம் செய்யும் ‘செலஸ்டியல் டிஸ்கவரி’ என்ற அந்த உல்லாசக் கப்பல் 47 நாள்களுக்குப் பிறகு துபாயிலிருந்து பயணிகளின்றிப் புறப்பட்டு, தற்போது ஓமன் வளைகுடா பகுதியை அடைந்துள்ளதாக மரீன் ட்ராஃபிக் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும் ஈரானின் அறிவிப்புகளைத் தொடர்ந்து எண்ணெய் விலை கிட்டத்தட்ட 10% குறைந்துள்ளது.
இதற்கிடையே, ஈரான் தனது வான்வெளியின் கிழக்குப் பகுதியை அனைத்துலக விமானங்களுக்காகப் பகுதி அளவில் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது.
எனினும், விமான கண்காணிப்புத் தளங்களின்படி பல விமானங்கள் இன்னும் ஈரானிய வான்வெளியைத் தவிர்த்து வருகின்றன.
ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வது ஈரானின் கடுமையான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது என்றும், தங்களின் அனுமதியுடன் குறிப்பிட்ட பாதைகளில் மட்டுமே பயணம் அனுமதிக்கப்படும் என்றும் ஈரான் நாடாளுமன்ற நாயகர் முகமது பாகர் காலிஃபாப் தெரிவித்துள்ளார்.

