தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா நகரில் தாக்குதலின் முதற்கட்டம் தொடங்கிவிட்டது: இஸ்ரேலிய ராணுவம்

2 mins read
d603f951-c7d1-4f51-806e-649d492871b3
காஸா வட்டாரத்தின் வட பகுதியில் ஜபாலியா நகரில் உள்ள கட்டடத்தை இஸ்ரேல் தாக்கியபோது அங்கிருந்து வேகமாக ஓடிச்செல்லும் பாலஸ்தீனர்கள். - படம்: ஏஎஃப்பி

டெல் அவிவ்: இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரை முழுமையாகக் கைப்பற்றி ஆக்கிரமிக்கும் திட்டத்தின் முதற்கட்டத்தைத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது.

ஸெய்த்தூன், ஜபாலியா வட்டாரங்களில் படைகள் தாக்குதலுக்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் ஏற்கெனவே ஈடுபட்டுவருவதாக ராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தாக்குதல் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிவிட்டார். இந்த வார இறுதியில் அது பாதுகாப்பு அமைச்சரவையின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்படும்.

அடுத்த மாதம் (செப்டம்பர் 2025) பணிக்கு வருமாறு ஏறக்குறைய 60,000 போர்க்காலப் படைவீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் தடையாய் விளங்குவதாக ஹமாஸ் குழு குற்றஞ்சாட்டியது. அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான கொடூரப் போரை இஸ்ரேல் தொடர்வதாக ஹமாஸ் சாடியது. ராய்ட்டர்ஸ் செய்தி அந்தத் தகவலை வெளியிட்டது.

“காஸா நகரில் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். நகரின் சுற்றுவட்டாரத்தை ஏற்கெனவே இஸ்ரேலியத் தற்காப்புப் படை வளைத்துப்பிடித்துள்ளது,” என்று இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இஸ்ரேலின் திட்டத்தை அதன் நட்புநாடுகளில் பல சாடியிருக்கின்றன.

இரு தரப்புக்குமே அது பேரழிவாய் அமையும் என்றும் ஒட்டுமொத்த வட்டாரத்தையும் அது நிரந்தரப் போர்க்களமாக மாற்றிவிடும் என்றும் பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன் தெரிவித்தார்.

காஸாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்துவது ஏற்கெனவே மோசமாக இருக்கும் நிலையை மேலும் கடுமையாக்கும் என்று அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.

சண்டையை நிறுத்தவும் பிணையாளிகளை மீட்கவும் ஹமாஸுடன் சென்ற மாதம் மேற்கொள்ளப்பட்ட மறைமுகப் பேச்சு முறிந்ததைத் தொடர்ந்து ஒட்டுமொத்த காஸா வட்டாரத்தையும் கையகப்படுத்தப்போவதாக இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்தது.

இந்நிலையில் காஸா நகரிலிருந்து பாலஸ்தீனர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் உடனடிச் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பேரிடரையும் மரணங்களையும் தவிர்க்கத் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்