பெய்ஜிங்: உலகில் கரிமத்தை ஆக அதிக அளவில் பயன்படுத்தும் நாடான சீனாவில், இவ்வாண்டு முற்பாதியில் உற்பத்தி செய்த மின்சாரத்தில் பாதிக்கும் குறைவான அளவே படிம எரிபொருளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டது.
முதன்முறையாக சீனா அவ்வளவு குறைவான அளவு மின்சாரத்தைப் படிம எரிபொருளிலிருந்து உற்பத்தி செய்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சீனா, புதுப்பிக்கக்கூடிய எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவித்துவருகிறது.
கரிமத்திலிருந்து 49.7 விழுக்காட்டு மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதாக சீனாவின் எரிசக்தி நிர்வாகத்தின் மேம்பாடு, திட்டமிடல் அலுவலகத்தின் துணைத் தலைமைச் செயலாளர் சிங் யித்தெங் வியாழக்கிழமை (ஜூலை 30) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தில் 41.2 விழுக்காட்டு அளவைப் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்தது. முதன்முறையாக அவ்விகிதம் 40 விழுக்காட்டைத் தாண்டியது.
காற்று, சூரியசக்தி ஆகியவற்றிலிருந்து 24.6 விழுக்காட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். எஞ்சிய அளவு மின்சாரம் இயற்கை எரிவாயு, அணுசக்தி ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டது.
எனினும், புள்ளிவிவரங்கள் இப்படி காட்டினாலும் சென்ற ஆண்டு பயன்படுத்தியதைவிட சீனா இவ்வாண்டு கூடுதலாகக் கரிமத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று கவனிப்பாளர்கள் நம்புகின்றர். மின்சாரத்துக்கான தேவை பெரிய அளவில் அதிகரித்துவருவது அதற்குக் காரணம் என்பது அவர்களின் கருத்து.

