பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை

1 mins read
22d9722a-d88b-4ade-a437-7994f549b3b5
அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள மேசசூசட்ஸ் பொது மருத்துவமனையில் மார்ச் 16ஆம் தேதி பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தும் அறுவை சிகிச்சை இடம்பெற்றது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

பாஸ்டன்: மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை 62 வயது ஆடவருக்குப் பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பன்றியின் சிறுநீரகம் மனிதனுக்குப் பொருத்தப்பட்டது இதுவே முதன்முறை.

இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இம்மாதம் 16ஆம் தேதி பாஸ்டன் நகரிலுள்ள மேசசூசட்ஸ் பொது மருத்துவமனையில் நான்கு மணி நேரம் நீடித்தது.

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட ரிச்சர்ட் ஸ்லேமன் என்ற அந்த ஆடவர் தற்போது நன்றாகத் தேறி வருவதாகவும் விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

ஏழாண்டுகால ரத்தச் சுத்திகரிப்பிற்குப் பிறகு, சிறுநீரக நோயாளியான ஸ்லேமனுக்கு இதே மருத்துவமனையில் கடந்த 2018ஆம் ஆண்டு இன்னொருவரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. ஆனால், அந்த உறுப்பு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு செயலிழந்துவிட்டதால், மீண்டும் அவர் ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சையைத் தொடங்கினார்.

இந்நிலையில், “நோயாளிகளுக்குத் தயார்நிலையிலுள்ள உறுப்புகளை வழங்குவதற்கான முயற்சியில் இந்த அறுவை சிகிச்சை முக்கிய மைல்கல்,” என்று மேசசூசட்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது.

அமெரிக்காவில் நூறாயிரத்திற்கும் மேற்பட்டோர் மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர் என்றும் சிறுநீரகத்திற்குத்தான் அதிகத் தேவை என்றும் ஐக்கிய உறுப்புப் பகிர்வுக் கட்டமைப்பு எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்