சிட்னி: ஆஸ்திரேலியாவின் அதிவலதுசாரி கட்சியான ஒன் நேஷன், மேற்கு ஆஸ்திரேலிய மாநிலக் கீழவையில் முதன்முறையாக ஒரு தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.
அக்கட்சி, சம்பந்தப்பட்ட தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டு வென்றது.
மொத்த வாக்குகளில் 75 விழுக்காடு எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ஒன் நேஷனின் லூக் ஹெர்டெகன் 57 விழுக்காடு வாக்குகளையும் தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் 43 விழுக்காடு வாக்குகளையும் பெற்றிருந்தனர். மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகரான பெர்த்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) இத்தகவல்களை வெளியிட்டது.
ஹெர்டெகன் தேர்தலில் வெற்றிபெற்றதாக ஏபிசி செய்தி நிறுவனம் கணித்துள்ளது.
பெர்த்தின் தெற்குப் பகுதிக்காகச் சென்ற ஆண்டு நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சியின் பால் பப்பாலியா வெற்றிபெற்றார். எட்டு விழுக்காட்டுக்குச் சற்று அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஒன் நேஷன் வேட்பாளர் தோல்வியடைந்தார்.
தமது குடும்பத்தார் ஒருவருக்கு உடல்நலம் குன்றியதால் தாம் அரசியலிலிருந்து ஓய்வுபெறப்போவதாக பப்பாலியா கடந்த ஜூலை மாதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
மாநில அவையில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் ஆட்சியில் இருப்பதால் இந்தத் தேர்தல் முடிவு அதன் ஆட்சியைப் பாதிக்காது. அதேவேளை, ஒன் நேஷன் கட்சியால் தேர்தல்களில் போட்டியிட்டு வெல்ல முடியும் என்பதை இந்தத் தேர்தல் முடிவு காட்டுவதாக நம்பப்படுகிறது.


