சட்டவிரோதக் குடியேறிகளை ருவாண்டாவிற்கு நாடுகடத்த ஐந்து நாடுகள் திட்டம்

சட்டவிரோதக் குடியேறிகளை ருவாண்டாவிற்கு நாடுகடத்த ஐந்து நாடுகள் திட்டம்

கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2026 - 2:31 pm

1 mins read

பெர்லின்: ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா, கிரீஸ், நெதர்லாந்து ஆகிய ஐந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அடுத்த ஆண்டு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் நாடுகடத்தப்பட்ட குடியேறிகள் மையத்தைத் திறக்க உள்ளன.

சட்டவிரோதமாகத் தங்கியிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்களுக்காக 2027ஆம் ஆண்டில் அம்மையம் செயல்படத் தொடங்கும் என நெதர்லாந்து, டென்மார்க் அரசாங்கங்கள் அறிவித்தன.

முதற்கட்டமாக, தனியாக இருக்கும் ஆண்கள் மட்டுமே அங்கு அனுப்பப்படுவர். இத்திட்டம் முன்னோட்டமாக ஏறக்குறைய 100 பேருடன் தொடங்கப்படவுள்ளது.

தஞ்சமடைவோர்க்கும் உதவும் அமைப்புகளின் சுமையைக் குறைக்கவும் மத்தியத் தரைக்கடல் வழியாக ஆட்கடத்துவோரைத் தடுக்கவும் உதவும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஆஸ்திரியப் பிரதமர் கிறிஸ்டியன் ஸ்டாக்கர் தெரிவித்தார்.

குடியேறிகளுக்குப் பாதுகாப்பான, கண்ணியமான தீர்வை வழங்க ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ருவாண்டா உள்துறை அமைச்சர் வின்சென்ட் பிருத்தா கூறினார்.

ஆயினும், இத்திட்டத்தில் எந்தவித எதிர்காலமோ மனிதநேயமோ இல்லை என ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் சாடியுள்ளார்.

இதனிடையே, 2026ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளைச் சட்டவிரோதமாகக் கடந்தோரின் எண்ணிக்கை 29 விழுக்காடு குறைந்து, ஏறக்குறைய 110,000ஆகப் பதிவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்