அமெரிக்கத் தாக்குதல்களில் ஐவர் மரணம்

அமெரிக்கத் தாக்குதல்களில் ஐவர் மரணம்

படம்: ஏஎஃப்பி

06 May 2026 - 3:27 pm

1 mins read

வாஷிங்டன்: லத்தின் அமெரிக்கக் கடற்பகுதிகளில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் படகுகள்மீது கடந்த இரண்டு நாள்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, அத்தகைய தாக்குதல்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது 190ஐ எட்டியுள்ளது.

கிழக்குப் பசிபிக் பகுதிகளில், குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்புகளின்கீழ் செயல்பட்ட படகின்மீது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்குதலை செவ்வாய்க்கிழமை (மே 5) அமெரிக்க ராணுவம் மேற்கொண்டதாக அமெரிக்கத் தெற்குத் தளபத்தியம் கூறியது.

அந்தப் படகு போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் பாதைகள் வழியாகச் சென்றுகொண்டிருந்ததாகவும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அமெரிக்கத் தெற்குத் தளபத்தியம் ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருந்தது.

“இந்த நடவடிக்கையின்போது ஆண் போதைப்பொருள் பயங்கரவாதிகள் மூவர் கொல்லப்பட்டனர்,” என்று அது தெரிவித்தது.

இதற்கு முன்னதாக, திங்கட்கிழமை (மே 4) அதுபோன்ற மற்றொரு தாக்குதல் கரிபியக் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலில் அமெரிக்கப் படைகள் இருவரைக் கொன்றதாகத் தெற்குத் தளபத்தியம் கூறியது.

இந்நிலையில், லத்தின் அமெரிக்காவில் செயல்படும் போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கும் தனக்கும் இடையே போர் நிலவுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் உறுதியாகக் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காதாக்குதல்படகு