https://www.bbc.com/news/articles/cqrm99mm9l84o
குளோஸ்டர்ஷியர்: பிரிட்டிஷ் விமானப் படைத்தளத்தை நோக்கி மூன்று ‘சந்தேகத்திற்குரிய வாகனங்கள்’ சென்றதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பயங்கரவாதச் செயலிலும் வெடிபொருள் சார்ந்த குற்றங்களிலும் ஈடுபட முயன்றதாகக் கூறி ஆடவர் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்தச் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் தொடர்பில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) அதிகாலை 12.45 மணியளவில் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
அதனையடுத்து, குளோஸ்டர்ஷியரில் உள்ள ஃபேர்ஃபர்ட் விமானப் படைத்தளத்திற்கு அருகில் அமைந்துள்ள வெல்ஃபர்ட் எனும் சிற்றூரைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இரவு முழுவதும் வீடு திரும்ப முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த வாகனங்களை ராணுவ வெடிபொருள் செயலிழப்புக் குழுவினர் ஆய்வுசெய்து வருகின்றனர். காவல்துறையினர் பயங்கரவாதத் தடுப்பு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் 400 மீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது.
அந்த விமானப் படைத்தளத்தை அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வருகிறது. அண்மையில் ஈரான்மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அத்தளத்தைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நிலவரம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பர்னமுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பீட்டர் ஹெக்செத்துடன் தாம் தொடர்பில் இருந்து வருவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் கூறினார்.
இதனிடையே, பிரிட்டனில் கைதுசெய்யப்பட்டவர்கள் ‘பெரிய சேதத்தை ஏற்படுத்த எண்ணியிருந்ததாக’ அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், தாங்கள் அவர்களை நீண்டகாலமாகக் கண்காணித்து வந்ததாகவும் தற்போது அவர்கள் பிடிபட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
