தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா-பாகிஸ்தான் போரில் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்: டிரம்ப்

2 mins read
18f52bc3-4da0-4dbc-b6d6-a2b7323ff3f9
பாகிஸ்தானின் ஆதரவுடன் பெஹல்கம்மில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்ததாக இந்தியா கூறியது. இதைப் பாகிஸ்தான் மறுத்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அண்மையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. அதில் அதிகபட்சம் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இரவு விருந்தில் கலந்துகொண்டபோது அதிபர் டிரம்ப் இவ்வாறு கூறினார்.

இருப்பினும், எந்தத் தரப்பு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது குறித்து அவர் விவரிக்கவில்லை.

நடுவானில் ஏற்பட்ட மோதலில் இந்தியாவுக்குச் சொந்தமான ஐந்து போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

போரின் முதல் நாளன்று இந்தியாவுக்கு இழப்புகள் ஏற்பட்டதாகக் கடந்த மே மாதம் இந்தியாவைச் சேர்ந்த உயர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

இழப்புகளைச் சந்தித்த பிறகு, இந்தியா உத்திகளை மாற்றியதாக அவர் குறிப்பிட்டார். அதன் பிறகு, இந்தியாவின் கையோங்கியதாகவும் மூன்று நாள்கள் கழித்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானுக்குச் சொந்தமான சில விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா தெரிவித்திருந்தது.

இதைப் பாகிஸ்தான் மறுத்தது. ஆனால் தனது விமானப் படை முகாம்கள் சேதமடைந்ததை அது ஒப்புக்கொண்டது.

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்குத் தாம்தான் காரணம் என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து பலமுறை கூறி வருகிறார்.

ஆனால் இதை இந்தியா ஏற்க மறுத்துள்ளது.

தனக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு நேரடித் தீர்வு காண வேண்டும் என்றும் மூன்றாவது நபரின் தலையீடு இருக்கக்கூடாது என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை ஏதிர்கொள்ள இந்தியாவின் பங்காளித்துவம் அமெரிக்காவுக்குத் தேவைப்படுகிறது.

அதே சமயம், அமெரிக்காவின் நட்பு நாடாகப் பாகிஸ்தான் திகழ்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலாத் தளமான பெஹல்கம்மில் பயங்கரவாதிகள் 26 பேரைச் சுட்டுக்கொன்றனர்.

பாகிஸ்தானின் ஆதரவுடன் அந்தத் தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறியது.

இதற்குப் பதிலடித் தாக்குதலாக ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடத்தப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டதாக இந்தியா கூறியது.

பெஹல்கம்மில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

பாரபட்சமில்லா விசாரணைக்கு அது அழைப்பு விடுத்தது.

பெஹ்கம்மில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்