ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாருவில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) கனமழை பெய்ததாலும் பலத்த காற்று வீசியதாலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதுடன் நகர மையம் அருகே உள்ள ஒரு வீதியில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதில் 15 கார்கள் வரையும் இரு கடைகளும் சேதமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாமான் பெலாங்கில் உள்ள கடைவீடு ஒன்றுக்கு முன்னால் இருந்த மரம் ஒன்று மாலை 4.45 மணியளவில் சாய்ந்து விழுந்தது. இதனால் ஜாலான் கூனிங்கில் பரபரப்பான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டத்தாக ஜோகூர் பாருவின் தென்மாவட்ட காவல்துறை தெரிவித்தது.
போக்குவரத்தைச் சமாளிக்க காவல்துறையும் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்த தீயணைப்புத் துறையும் நகர மன்ற அதிகாரிகளும் உதவியதாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறைப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று சொன்ன அவர், ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் 15 கார்களும் இரு வணிக வளாகங்களும் சேதமுற்றதாகத் தெரிவித்தார்.
ஜோகூர் பாருவில் மற்ற இடங்களிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.