பெட்டாலிங் ஜெயா: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் வட்டாரத்தில் அண்மையில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த நிலையில், அப்பகுதியின் சாலைகளில் கணுக்கால் அளவிலான சேறு கலந்த நீர் திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 20) பெருக்கெடுத்து ஓடியது.
மாலை 4 மணி அளவில் தொடங்கிய கனமழைக்குப் பிறகு, அப்பகுதியில் நீர்மட்டம் உயர்ந்ததைக் குடியிருப்பாளர்கள் ஸ்டார் மெட்ரோவிடம் பகிர்ந்துகொண்ட புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவை காட்டுகின்றன.
ஜாலான் அபாங் ஹாஜி ஓபெங் சாலையில் நீர் தேங்கியுள்ளதாக தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் குடியிருப்பாளர்கள் சங்கச் செயற்குழு உறுப்பினர் கைருதீன் ரஹீம் குறுஞ்செய்தி ஒன்றில் தெரிவித்தார்.
தேசிய நிலப்பரப்புத் துறைத் திட்டத்தின் ஒரு பகுதியான அந்தத் தடுப்புச் சுவர், சனிக்கிழமை பெய்த பலத்த மழைக்குப் பிறகு இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, துப்புரவுப் பணிகளை எளிதாக்குவதற்காகக் கோலாலம்பூர் மாநகராட்சி பணியை நிறுத்திவைக்கும் உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த இடியுடன் கூடிய மழைக்குப் பிறகு கோலாலம்பூர் முழுவதும் பல இடங்களில் மரங்கள் சாய்ந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

