பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பல மாவட்டஙகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) காலையிலிருந்து இடைவிடாக் கனமழை பெய்ததில் வெள்ளம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட இடங்களில் பெட்டாலிங் ஜெயாவும் ஒன்று.
அங்கு பல இடங்களில் வெள்ள நீர் 0.61 மீட்டர் உயரத்தை எட்டியதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத்துறையின் இயங்குப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
பூச்சோங்கில் உள்ள கம்போங் தெங்காவில் கிட்டத்தட்ட 20 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதன் காரணமாக ஆறு பேர் பாதிப்படைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
அவர்கள் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள துயர்துடைப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பூச்சோங்கில் உள்ள கம்போங் ஸ்ரீ அமானில் ஏறத்தாழ 30 வீடுகளுக்கும் வெள்ளநீர் புகுந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதில் 120 குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்தனர்.
ஆனால் அப்பகுகுதியில் வெள்ளம் வடிந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஷா அலாமில் உள்ள கம்போங் பாடாங் ஜாவாவில் வெள்ளம் காரணமாக 20 வீடுகள் சேதமடைந்தன.
வெள்ள நீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்ததாகவும் அதில் மூவர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கிள்ளான் மாவட்டத்தில் உள்ள தாமான் ஸ்ரீ ஜெயாவில் பத்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
பாதிக்கப்பட்ட எட்டு பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள துயர்துடைப்பு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள கம்போங் சுங்கை மெராப் லுவாரில் வெள்ளம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காஜாங்கில் வெள்ள நீர் மட்டம் 1.12 மீட்டர் உயர்ந்ததாகவும் 12 வீடுகள் பாதிப்படைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
அப்பகுதியிலிருந்து 15 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
அங்கு வெள்ளம் வடிந்து வருவதாகக் கூறப்படுகிறது.

