சிட்னி: ஆஸ்திரேலிய அதிகாரிகள் சிட்னி நகருக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள எச்சரிக்கை நிலையை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) கீழிறக்கியுள்ளனர்.
முன்னதாக கனமழையைத் தொடர்ந்து அங்கு வெள்ளம் ஏற்பட்டது. அதனால் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கடலோரப் பகுதியான நர்ராபீனில் வெள்ளம் வடிந்துவருவதாகவும் இனியும் அது குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்காது என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசரகாலச் சேவைப் பிரிவு தெரிவித்தது.
நர்ராபீன் சிட்னியின் தாழ்வான புறநகர்ப் பகுதியாகும். அங்கு அபாயகரமான வெள்ளம் ஏற்பட்டதால் குடியிருப்பாளர்களையும் சுற்றுப்பயணிகளையும் சனிக்கிழமை வெளியேற்ற நேரிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
மாநிலம் முழுவதும் 1,700க்கும் மேற்பட்ட சம்பவங்களில் அவசரகால உதவிக் குழுக்கள் உதவிக்கரம் நீட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிட்னியின் வடக்கு எல்லைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் இரண்டு மணி நேரத்திற்குள் 72.4 மில்லிமீட்டர் மழை பொழிந்ததாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
சனிக்கிழமை, சிட்னியிலிருந்து 66 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள வொலோங்காங் பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாது ஒருவர் மாண்டதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

