தொடர் மழையால் கெடா, பினாங்கில் திடீர் வெள்ளப்பெருக்கு

தொடர் மழையால் கெடா, பினாங்கில் திடீர் வெள்ளப்பெருக்கு

படம்: அன்ஸ்பிளாஷ்

26 Oct 2026 - 4:27 pm

1 mins read

ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் வட மாநிலங்கள் சிலவற்றில் தொடர்ந்து பெய்து வரும் மழை திங்கட்கிழமையும் (அக்டோபர் 26) நீடித்தது.

பினாங்கு முழுவதும் மற்றும் கெடா, பெர்லிஸின் பெரும்பாலான பகுதிகளில் அடர்ந்த மேகமூட்டம் சூழ்ந்திருப்பதைச் செயற்கைக்கோள் படங்கள் காட்டின.

அந்த மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) இரவு 10 மணி முதல் மழை பெய்து வருகிறது.

திங்கட்கிழமை விடியற்காலை 5 மணி நிலவரப்படி பல ஆறுகளில் நீர்மட்டம் எச்சரிக்கை நிலையை அல்லது ஆபத்தான கட்டத்தை எட்டியிருந்தது.

குறிப்பாக, லங்காவியின் பாடாங் மாட்சிராட்டில் உள்ள சுங்கை மலாக்கா ஆறு, அதன் எச்சரிக்கை அளவான 3.1 மீட்டரைத் தாண்டி 3.268 மீட்டராக உயர்ந்தது.

கெடாவின் யான் வட்டாரத்தின் அருகில் உள்ள ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் கரைபுரண்டு ஓடியதைத் தொடர்ந்து, கம்போங் தித்தி தெராஸ் மற்றும் கம்போங் தெரோய் புக்கிட் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

அதனால் ஏறத்தாழ 30 குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டன.

பினாங்கில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் பத்து இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில், மரங்கள் விழுந்த, கிளைகள் முறிந்த 14 சம்பவங்களும் நிகழ்ந்தன.

தாமான் செரி ராம்பாயில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 73 வயது மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மனைவியும் மாமியாரும் காயமின்றித் தப்பினர். முற்பகல் 11.20 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவெள்ளம்மழை