இந்தோனீசியாவின் வடக்கு சுலவேசியில் திடீர் வெள்ளம்; 14 பேர் உயிரிழப்பு

1 mins read
87572d5a-6eb3-4c45-867d-0cac365f5984
ஜனவரி 5ஆம் தேதி, அச்சேவின் பிருயென் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து ஆற்றைக் கடக்கக் காத்திருந்த மக்கள். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் வடக்கு சுலவேசி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாக அவ்வட்டார மீட்பு அமைப்பைச் சேர்ந்த பேச்சாளர் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) தெரிவித்தார்.

காணாமல் போனோரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

ஜனவரி 5ஆம் தேதி, அதிகாலை பெய்த கனமழையால் சியாவ் டகுலாண்டாங் பியாரோ பகுதியில் அமைந்துள்ள சியாவ் தீவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எனத் திரு நூரியாடின் குமெலெங் சொன்னார்.

காணாமல்போன நால்வரைத் தேடுவதற்காகப் பதினாறு மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர்வாசிகளிடமிருந்து காணாமல் போனவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றும் ஜனவரி 6ஆம் தேதி நிலவரப்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் பாறைகள், குப்பைகள் ஆகியவை சிதறிக் கிடக்கின்றன என்றும் திரு குமெலெங் தெரிவித்தார்.

“சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட 444 பேர் உள்ளூர் பள்ளிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்,” என இந்தோனீசியப் பேரிடர் தணிப்பு அமைப்பின் பேச்சாளர் அப்துல் முகாரி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்