ஜப்பானில் வெள்ள, நிலச்சரிவு முன்னெச்சரிக்கை

தோக்கியோவை நெருங்குகிறது ‘டுஜுவான்’ சூறாவளி

ஜப்பானில் வெள்ள, நிலச்சரிவு முன்னெச்சரிக்கை

படம்: இபிஏ

21 Sep 2026 - 11:57 am

1 mins read

தோக்கியோ: ஜப்பானின் பசிபிக் கடலோரப் பகுதியை நோக்கி திங்கட்கிழமை (செப்டம்பர் 21) சக்திவாய்ந்த சூறாவளி நகர்ந்துவருவதாக அந்நாட்டின் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கன்டோ வட்டார, கிழக்கு ஜப்பானின் மற்றப் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று, நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

‘டுஜுவான்’ சூறாவளி திங்கட்கிழமை பின்னேரத்தில் தோக்கியோ பெருநகரப் பகுதியை ஒட்டிக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வானிலை மிக வேகமாக மோசமடையக்கூடும் என்று ஆய்வகம் எச்சரித்தது.

இசூ தீவுகள், சிபா வட்டாரம், பசிபிக் கடலோரப் பகுதிகளில் ஏற்கெனவே கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் கடந்த சனிக்கிழமை முதல் 300 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

தோக்கியோவையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய கன்டோ வட்டாரத்தைச் சூறாவளி நெருங்குகிறது. அதனால் திங்கட்கிழமை பிற்பகல் முதல் கனமழை மேலும் தீவிரமடையக்கூடும் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

மத்திய ஜப்பானின் ஐச்சி வட்டாரத்தில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சூறாவளி நெருங்குவதைக் கருத்தில் கொண்டு, குதிரையேற்றப் போட்டிகளை ஏற்பாட்டாளர்கள் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

கன்டோவிலும் மத்திய ஜப்பானிலும் பெருமழை பெய்யக்கூடும் என்றும் அதனால் வெள்ளமும் பேரிடரும் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

கிழக்காசியா முதல் வட அமெரிக்கா, ஐரோப்பா வரையிலான பகுதிகளில் கடுமையான மழை, வெள்ளப்பெருக்கு, சூறாவளி முதலியவை உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் டுஜுவான் சூறாவளி உருவெடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்