காத்மண்டு: நேப்பாளத்தின் போடேகோசி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், அனைத்துலகத் தேடல், மீட்புக் குழுக்களின் உதவியை நாடப்போவதில்லை என்ற தனது முந்தைய முடிவை நேப்பாள அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
இந்தப் பேரிடரில் தங்களது குடிமக்களும் மாயமாகி உள்ளதால் பல்வேறு நாடுகள் அளித்த கடுமையான தூதரக அழுத்தத்தைத் தொடர்ந்து நேப்பாள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
புதன்கிழமை (ஆகஸ்ட் 26) நேப்பாள மீட்புப் பணியாளர்கள் மட்டுமே மீட்புப் பணிகளைச் சமாளிக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் பிற நாடுகளின் மீட்புக் குழுவினர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் நேப்பாள அரசு கூறியிருந்தது.
இருப்பினும், இந்த முடிவு ஒருநாள்கூட நீடிக்கவில்லை. நீர்மின் திட்ட சுரங்கப் பாதைகளில் சிக்கியவர்களை மீட்கவும் மரபணுச் சோதனைகள், தடயவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் குறைந்த அளவிலான வெளிநாட்டு நிபுணத்துவ உதவியைப் பெற நிர்வாகம் முடிவு செய்தது.
“வெள்ளத்தில் தங்கள் குடிமக்களும் காணாமல் போயுள்ளதால், தேடல், மீட்புக் குழுக்களையும் சில நிபுணர்களையுமாவது அனுமதிக்கக் கோரி அனைத்துலகச் சமூகத்திடமிருந்து கடுமையான அழுத்தம் ஏற்பட்டது,” என்று நேப்பாள அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே குறிப்பிட்ட சில துறைகளில் குறைந்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிபுணர்களை அனுமதிப்பதாக அவர் விளக்கமளித்தார்.
போடேகோசி மற்றும் திரிசூலி ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளை இந்தத் திடீர் வெள்ளம் முற்றிலுமாக அழித்துவிட்டது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) நிலவரப்படி, இந்த இயற்கைப் பேரிடரில் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 31 நாடுகளைச் சேர்ந்த 517 வெளிநாட்டவர்கள் உட்பட 977 பேரை இன்னும் காணவில்லை என்று பதிவாகியுள்ளது.
நேப்பாள சுற்றுலா வாரியத்தின் அண்மைப் பதிவுகளின்படி, காணாமல் போனவர்களில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர் (178 பேர்). அவர்களுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவைச் சேர்ந்த 65 பேரும் உக்ரேனைச் சேர்ந்த 53 பேரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 35 பேரும் பிரிட்டனைச் சேர்ந்த 33 பேரும் மாயமாகி உள்ளனர்.
நேப்பாளத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில், மீட்புப் பணிகளில் ஈடுபட அமைச்சுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் குழு மூலம் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நேப்பாள வெளியுறவு அமைச்சர் சிசிர் கலாலிடம் பேசினார்.
“நேப்பாள வெளியுறவு அமைச்சரிடம் பேசினேன். பல்வேறு உதவிகளை வழங்க முன்வந்துள்ளோம். அவர்கள் அதை பரிசீலித்து வருகின்றனர்,” என்று டாக்டர் டஜெய்சங்கர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், நேப்பாளத்துக்கு நான்காவது கட்ட நிவாரணப் பொருள்களை அனுப்பும்போது, மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சுரங்கப் பாதை மீட்புக் குழுவை உள்ளடக்கிய 11 பேர் கொண்ட குழுவும் அதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
தென்கொரியாவும் கூடுதல் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 27) தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியுன், நேப்பாள வெளியுறவு அமைச்சரிடம் பேசி, தொடர்புகொள்ள முடியாத ஒன்பது தென்கொரியர்கள் உட்பட தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தார்.
அத்துடன், பேரிடர் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ள உடனடி மீட்புக் குழு தடையின்றி மீட்புப் பணிகளைச் செய்ய நேப்பாள அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


