காஸாவில் வெள்ளம்; கூடாரங்களில் அவதியுறும் பாலஸ்தீனர்கள்

2 mins read
a8062a1c-d56a-4f1e-aa97-a86d6c775486
தென் காஸா வட்டாரத்தின் கான் யூனிஸ் நகரில் உள்ள கூடாரங்களில் வசிப்போர் மழைக்காலத்தில் சிரமப்படுகின்றனர். - படம்: இபிஏ
multi-img1 of 2

காஸா: காஸா வட்டாரத்தில் பெய்த பெருமழையால் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாலஸ்தீனர்கள் தங்கியுள்ள கூடாரங்கள் நீரில் தத்தளிக்கின்றன.

அதனால் ஆயிரக்கணக்கானோர் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர். உறுதியான உறைவிடமின்றி மக்கள் தவிக்கின்றனர்.

காஸாவில் இரண்டு மில்லியன் பாலஸ்தீனர்கள் வசிக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 1.9 மில்லியன் பேர் வீடுகளை இழந்துவிட்டனர். 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்குப் போர் மூண்டது. அப்போதிருந்து இஸ்ரேல், காஸாவைக் கடுமையாகத் தாக்கிவருகிறது. பெரும்பாலோர் இப்போது கூடாரங்களில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சென்ற மாத (அக்டோபர் 2025) நடுப்பகுதியிலிருந்து சண்டை நிறுத்தம் நடப்பிலிருக்கிறது. காஸாவின் உள்கட்டமைப்புகள் உட்பட ஏராளமான கட்டடங்கள் போரால் தரைமட்டமாகியுள்ளன.

மழைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகச் சிலர் கூறினர். கூடாரங்கள் முற்றாகச் சேதமடைந்துவிட்டன என்றும் புதியவை இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் வருத்தப்பட்டனர்.

குறைந்தது 300,000 புதிய கூடாரங்கள் தேவை என்று அரசாங்கம் சாரா அமைப்புகள் கூறுகின்றன.

கடந்த வாரம் பெய்த பலத்த மழையால், ஆயிரக்கணக்கான கூடாரங்கள் சேதமடைந்ததாகப் பாலஸ்தீனக் குடிமைத் தற்காப்புச் சேவை சொன்னது.

மழைக்காலத்தைச் சமாளிப்பதற்கான அத்தியாவசியப் பொருள்களைக் காஸாவிற்குள் கொண்டுசெல்ல முயல்வதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும், இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கனரக வாகனங்களே உள்ளே நுழைய முடிவதாக அது சொன்னது.

ஆனால், சண்டை நிறுத்த உடன்பாட்டின்படி நடந்துகொள்வதாக இஸ்ரேல் கூறுகிறது. காஸாவுக்குள் உதவிப்பொருள்கள் நுழைவதைத் தடுத்துநிறுத்தவில்லை என்றும் அது சொல்கிறது. உதவிப்பொருள்களை ஹமாஸ் குழு களவாடுவதாக இஸ்ரேல் தெரிவித்தது. பொருள்களைத் திருடவில்லை என்கிறது ஹமாஸ் தரப்பு.

குறிப்புச் சொற்கள்