தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெள்ளம்: மலேசிய அமைச்சர்களின் விடுமுறையை ரத்து செய்தார் அன்வார்

2 mins read
வெள்ளத்தால் 100,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்
ccffa88b-e143-41f5-b7d5-6b37cee2efa0
மலேசியா வெள்ளத்தால் நவம்பர் 29ஆம் தேதி இரவு நிலவரப்படி 103,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். - படம்: முகமது அமிஸுல் ஃபஸ்லி பின் முகமது சுதின்
multi-img1 of 2

கோலாலம்பூர்: மலேசியாவின் ஒன்பது மாநிலங்களில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) வெள்ளம் சூழ்ந்த நிலையில், கிளந்தான் மாநிலம் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ஏறத்தாழ 103,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி அவர்களில் 74 விழுக்காட்டினர் கிளந்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் 19 விழுக்காட்டினர் திரங்கானுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அரசாங்கப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

எஞ்சிய 7 விழுக்காட்டினர் பெர்லிஸ், கெடா, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

ஒன்பது மாநிலங்கள் வெள்ளக்காடானதை அடுத்து, அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் அனைவரின் விடுமுறையையும் பிரதமர் அன்வார் இப்ராகிம் ரத்து செய்துள்ளார்.

வெள்ள நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தும்படி அவர்களுக்குத் திரு அன்வார் உத்தரவிட்டதாகவும் த ஸ்டார் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

மலேசியத் துணைப் பிரதமர் ஸாஹித் ஹமிடி கிளந்தானுக்குச் சென்று பார்வையிட்டார்.

2014ஆம் ஆண்டைவிட இப்போதைய நிலைமை மோசமாக இருப்பதாக, வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டோர் அவரிடம் கூறினர்.

சேறும் சகதியும் கலந்த வெள்ள நீரால் அப்போது கிளந்தானில் 200,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

“நிவாரணக் கூடாரங்கள் போதவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் கையிருப்பில் உள்ள கூடாரங்களைக் கிளந்தானுக்கு அனுப்பிவைக்கும்படி தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்று துணைப் பிரதமர் ஸாஹித் கூறினார். அவருடன் கிளந்தான் முதல்வர் நசுருதீன் தாவூதும் சென்றிருந்ததாகச் செய்தியாளர்கள் கூறினர்.

வெள்ளத்தால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், பள்ளிகள், பொது அரங்கங்களில் தங்கவைக்கப்படுவதும் வெள்ளம் வடியும்வரை சிறிய கூடாரங்களில் அவர்கள் உறங்க நேரிடுவதும் வழக்கம்.

பொதுத் தேர்வு (சிங்கப்பூரின் சாதாரண நிலைத் தேர்வுக்குச் சமமானது) எழுதும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்குப் பாதுகாப்பாகச் செல்ல போக்குவரத்து ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க, கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் கிளந்தான் வந்துகொண்டிருப்பதாகத் திரு ஸாஹித் கூறினார். டிசம்பர் 2ஆம் தேதி அந்தத் தேர்வுகள் தொடங்கவிருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்