ஜார்ஜ் டவுன்: புயல்மழையால் சிதைக்கப்பட்டுள்ள பினாங்கு மாநிலத்தில், கிட்டத்தட்ட 200 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
பெருவெள்ளம் ஏற்படும் இந்த வானிலை நிலவரம் தணியும்வரை எச்சரிக்கை காக்குமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.
மலேசிய வானிலை மையத்தின்படி இந்த புயல் மழை, செப்டம்பர் 18 வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யாவ் கூறியுள்ளார்.
பினாங்கில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பல இடங்களில் சாய்ந்த மரங்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 71 இடங்களில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.
“ஞாயிற்றுக்கிழமை 90 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனால் மூன்று வீடுகளும் எட்டு கார்களும் சேதமடைந்தன. திங்கட்கிழமையன்று ஒன்பது இடங்களில் மரங்கள் சாய்ந்தன. செப்டம்பர் 17ஆம் தேதி நண்பகல் நிலவரப்படி, 43 இடங்களில் சாய்ந்த மரங்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. பினாங்கில் உள்ள ஒரு மாநகரமான செபராங் பிராயில் 30 மரங்கள் சாய்ந்துள்ளன,” என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இந்த வானிலை முழுமையாக ஓயும்வரை சாலைகளில் எச்சரிக்கை காக்குமாறு திரு சோவ் மலேசியர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, பினாங்கிலுள்ள பிரபல கடற்கரைப் பகுதிகளில் பலமான காற்றுடன் கூடிய உயரமான கடலலைகள் காரணமாக அங்கிருந்த மக்கள் பீதியில் அடைக்கலம் தேடி ஓடியதாக மலேசிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.