தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வியட்னாமில் வரலாறு காணாத பெருமழை; வெள்ளத்தில் 9 பேர் பலி

1 mins read
ea7d3b20-294d-403a-ae7f-8e3a644b1824
ஹியூ பகுதியின் பெரும்பாலன பகுதிகளில் 2 மீட்டர் ஆழம் வரை வெள்ள நீர் நிறைந்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

ஹனோய்: வியட்னாமில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர், ஐவர் காணாமல் போயுள்ளனர் என்று புதன்கிழமை (அக்டோபர் 29) அரசாங்கம் தெரிவித்தது.

வெள்ளத்தில் 103,000க்கும் மேற்பட்ட வீடுகளும் மூழ்கியுள்ளன. நாட்டின் பிரபல சுற்றுலாத் தளங்களான ஹியூ, ஹோய் உள்ளிட்ட நகரங்களை வெள்ளம் பாதித்துள்ளதாக அரசாங்கப் பேரிடர் அமைப்பின் அறிக்கை தெரிவித்தது.

அதனால் அங்கு அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது.

யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஹோய் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அப்பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

வியட்னாமின் வடக்கு திசையில் உள்ள ஹனோய், தெற்கு திசையில் உள்ள ஹோ சி மின் நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அங்கு திங்கட்கிழமை (அக்டோபர் 27) இரவு வரையிலான 24 மணிநேரத்தில், வரலாற்றில் முதல் முறையாக 1,085.8 சென்டி மீட்டர் மழை பெய்தது பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சில இடங்களில் நாளை வரை மழைப்பொழிவு 400 மில்லிமீட்டருக்குமேல் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வியட்னாம் வெள்ள அபாயமிக்க நாடு. குறிப்பாகப் பருவமழைக் காலத்தில் புயலும் வெள்ளமும் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான மக்கள் அதிக வெள்ள அபாயமுள்ள பகுதிகளில்தான் வசித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்