பங்ளாதே‌ஷில் வெள்ளப்பெருக்கு, சிலர் மரணம்

2 mins read
a324665d-da09-4312-8b87-3098d5fbed75
பங்ளாதே‌ஷின் ஃபெனி பகுதியில் வெள்ளத்தில் நடக்கும் மக்கள். - படம்: ஏஎஃப்பி

டாக்கா: தொடர் மழையால் தாழ்வான பகுதியில் அமைந்திருக்கும் பங்ளாதே‌ஷில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்று அந்நாட்டின் பேரிடர்களைக் கையாளும் அதிகாரிகள் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 22) தெரிவித்துள்ளனர்.

பல வாரங்களாக நிலையற்ற அரசியல் சூழலால் பாதிக்கப்பட்டிருந்த பங்ளாதே‌ஷில் அதன் புதிய அரசாங்கத்துக்கு இப்பிரச்சினை மேலும் ஒரு சவாலாக அமைந்துள்ளது.

வெள்ளத்தால் அந்நாட்டின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் குறைந்தது எட்டு மாவட்டங்களில் இருவர் மாண்டுவிட்டனர்; நூறாயிரக்கணக்கானோர் நகர முடியாமல் தவிக்கின்றனர்.

“சுமார் 2.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 70,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்,” என்று பங்ளாதே‌ஷின் பேரிடர் நிர்வாக, நிவாரண அமைச்சில் பணியாற்றும் மூத்த அதிகாரியான முகம்மது நாஸ்முல் அபிடின் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

15 ஆண்டுகளாக பங்ளாதே‌ஷ் பிரதமராகப் பதவி வகித்த ‌ஷேக் ஹசினா, இம்மாதம் அப்பொறுப்பிலிருந்து விலகி இந்தியாவுக்குத் தப்பியோடினார். பலரைப் பலிவாங்கிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து திருவாட்டி ஹசினா அந்த முடிவெடுத்தார். மாணவர்கள் அந்த ஆர்ப்பாட்டங்களை வழிநடத்தினர்.

170 மில்லியன் மக்கள் வசிக்கும் தெற்காசிய நாடான பங்ளாதே‌‌ஷில் நூற்றுக்கணக்கான ஆறுகள் ஓடுகின்றன. அதனால் பல ஆண்டுகளாக அந்நாட்டில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வந்துள்ளது.

உலகப் பருவநிலை அபாயக் குறியீட்டின்படி, பேரிடர்கள், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் ஆக அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளில் பங்ளாதே‌ஷ் அடங்கும்.

பங்ளாதே‌ஷில் பொழியும் பருவமழை ஆண்டுதோறும் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் வானிலை நிகழ்வுகள் மாறுகின்றன. அதனால் மோசமான வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கவும் செய்கின்றன.

நிரம்பி வழியும் ஆறுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க பங்ளாதே‌‌ஷ் ராணுவ, கடற்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்