ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம், கிளியர்வாட்டரில் உள்ள கடற்பாலத்துக்கு அருகே 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பெரிய படகின்மீது வேறொரு படகு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார்; பலர் காயமுற்றனர்.
விபத்துக்குக் காரணமான படகு ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டதாகத் தெரிவித்த காவல்துறை, கடுமையாகக் காயமுற்ற குறைந்தது இருவர் ஹெலிகாப்டரில் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகச் சொன்னது.
அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்த விபத்து குறித்து உடனடியாகத் தெரியப்படுத்தப்பட்டதாகக் கூறிய கிளியர்வாட்டர் காவல்துறை, இச்சம்பவம் குறித்த விசாரணையை அமெரிக்கக் கடலோரக் காவல்படை கையாளும் என்றது.
“காய்முற்றோர் அனைவரும் பெரிய படகில் இருந்தவர்கள். அதன்மீது மோதிய சிறிய படகு அங்கிருந்து சென்றுவிட்டது,” என்று காவல்துறை சொன்னது.
பதினேழு நாள் ‘ஷுகர் சேண்ட்’ திருவிழாவின் இறுதி நாளான சனிக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. அத்திருவிழாவில் பங்கேற்கபதற்காக பலரும் படகுகளில் பயணம் மேற்கொண்டதாக ஊடகத் தகவல்கள் கூறின.