ஃபுளோரிடாவில் விமான விபத்து; ஒன்பது பேர் உயிரிழப்பு

ஃபுளோரிடாவில் விமான விபத்து; ஒன்பது பேர் உயிரிழப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

02 Nov 2026 - 2:50 pm

2 mins read

சிகாகோ: ஃபுளோரிடா மாநிலத்தின் ‘பாம் பீச் கவுன்டி’யில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) பிற்பகல் ‘லியர்ஜெட்’ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ஒன்பது பேரும் உயிரிழந்ததாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தத் தனியார் விமானம் டெக்சசின் ஆஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பஹாமாசில் உள்ள ‘வடக்கு எலுதெரா’ விமான நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகளில், அந்த விமானம் சாலைக்கு அருகே தரையில் வேகமாக மோதி வெடித்துச் சிதறுவதைக் காணமுடிகிறது.

“இது ஒரு மிகப் பெரிய துயரச் சம்பவம்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் ஃபுளோரிடா ஆளுநர் ரோன் டிசாண்டிஸ் கூறினார்.

“அந்தக் காணொளியைப் பார்க்கும்போது அது நெஞ்சைப் பதற வைக்கிறது. ஓர் ஏவுகணை கீழே பாய்ந்து விழுவதைப் போல இருந்தது. அதைத் தொடர்ந்து பெரும் வெடிப்பு ஏற்பட்டு இடிபாடுகள் எல்லா இடங்களிலும் சிதறின,” என அவர் சொன்னார்.

போக்குவரத்து அமைச்சர் ஷோன் டஃபி ‘பயங்கரமான பெருந்துயரம்’ என்று விவரித்த அந்த விபத்து தொடர்பில் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கத் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் தெரிவித்தது.

மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் ஆவணங்களின்படி, ‘பாம்பார்டியர்’ (Bombardier) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த ‘லியர்ஜெட்’ 60 ரக விமானத்தின் உரிமையாளராக டெலாவேர் மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அந்த விசாரணைக்கு முழு ஆதரவு அளிக்கப்போவதாகவும் தேவையான ஒத்துழைப்பை வழங்கப்போவதாகவும் கனடாவைத் தளமாகக் கொண்ட ‘பாம்பார்டியர்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்