மணிலா: பிலிப்பீன்சில் சளிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்துவருவதால் தலைநகர் மணிலாவில் உள்ள அரசாங்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களிடையேயும் ஊழியர்களிடையேயும் சளிக்காய்ச்சல் அதிகம் பரவி வருவதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசியத் தலைநகர் வட்டாரக் கல்விப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) இதனை அறிவித்தது.
இந்தக் காலகட்டத்தில் கற்றலுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பள்ளிகள் மாற்று ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அப்பிரிவு கூறியது. நேரடி வகுப்புகள் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு அண்மையில் பிலிப்பீன்சைப் பலமுறை நிலநடுக்கங்கள் உலுக்கியதும் காரணம் என்று கல்விப் பிரிவு தெரிவித்தது.
இரு நாள்களாக அரசாங்கப் பள்ளிகள் தங்கள் கட்டட வளாகங்களைக் கிருமி நாசினியால் சுத்தம் செய்து சோதனையிடுமாறு உத்தரவிடப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டால் எடுக்கவேண்டிய செயல்கள் போன்ற அவசரகால நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கல்விப் பிரிவு பள்ளிகளுக்கு உத்தரவிட்டது. சுகாதார, பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறும் பிரிவு உத்தரவிட்டது.
தனியார் பள்ளிகளும் இந்நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊக்குவிக்கப்படுவதாகவும் கல்விப் பிரிவு அறிவுரை வழங்கியது.
நாடு முழுவதும் சளிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகரிப்பதாகத் தகவல் வெளிவந்தாலும் சென்ற ஆண்டு பதிவானதைக் காட்டிலும் இவ்வாண்டின் சளிக்காய்ச்சல் சம்பவங்கள் குறைவு என்று சுகாதாரப் பிரிவுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.