உணவை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது: கனடியப் பிரதமர்

2 mins read
18b15af9-7e2c-4de2-8419-81626277edc1
அனைத்துலக உணவுத் திட்டத்தைக் காஸாவுக்குள் செயல்பட அனுமதிக்கும்படி கனடியப் பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தினார்.  - படம்: இபிஏ

ஒட்டோவா: இஸ்ரேல், அனைத்துல உணவுத் திட்டத்தைக் காஸாவுக்குள் செயல்பட அனுமதிக்கும்படி கனடியப் பிரதமர் மார்க் கார்னி கேட்டுக்கொண்டுள்ளார். உணவை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

விநியோகங்களை இஸ்ரேல் தடுத்ததைத் தொடர்ந்து ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக உணவுத் திட்டத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அனைத்துலக உணவு அமைப்பு, தன்னிடமிருந்த கடைசி பொருள்களை காஸாவில் சூடான உணவுகளை விநியோகிக்கும் சமையலறைகளுக்கு விநியோகம் செய்துவிட்டதாகக் கூறியது. அடுத்த சில நாள்களில் அங்கு உணவுத் தட்டுபாடு ஏற்படும் என்றும் அது குறிப்பிட்டது.

- படம்: இபிஏ

அனைத்து முக்கிய எல்லைப் பாதைகளும் மூடப்பட்டுள்ளதால் மனிதநேய, வர்த்தகப் பொருள்கள் காஸாவுக்குள் கொண்டுசெல்லப்பட்டு ஏழு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் சொன்னது.

“ஹமாஸ் கிளர்ச்சியாளர்களின் குற்றங்களுக்கான விளைவுகளைப் பாலஸ்தீனக் குடிமக்கள் அனுபவிக்கக்கூடாது,” என்ற திரு கார்னி, “அனைத்துலக உணவு அமைப்பு உயிர்களைக் காப்பாற்றும் அதன் வேலையைச் செய்ய அனுமதிக்கப்படவேண்டும்,” என்றார்.

காஸா பசிக் கொடுமையை எதிர்கொள்வதாகக் கூறப்படுவதை இஸ்ரேல் இதற்குமுன் மறுத்தது. காஸாவை நிர்வகிக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் உதவிப்பொருள்களைத் தங்களுக்கென பயன்படுத்துவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. அதை ஹமாஸ் தரப்பு மறுத்தது.

2.3 மில்லியன் மக்கள் உள்ள காஸாவில் பட்டினி ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது என காஸா அரசாங்க ஊடக அலுவலகம் கூறியது.

ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்ட இஸ்ரேல்-ஹமாஸ் சண்டைநிறுத்தம் மார்ச் 18ஆம் தேதி நிலைகுலைந்ததை அடுத்து, இஸ்ரேல் தாக்குதலில் 1,900க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் மாண்டனர் என்று காஸாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்