ஜெருசலம்: காஸாவிலிருந்து வெளியேறும்படி பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் தொடர்ந்து பலமுறை உத்தரவிட்டது, ஓர் இடத்திலிருந்து மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போர்க் குற்றத்துக்குச் சமமானது என்று மனித உரிமை கண்காணிப்புக் குழு நவம்பர் 14ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் சில பகுதிகளில் இஸ்ரேலின் இத்தகைய செயல் இனப் படுகொலைக்குச் சமம் என்று அது கூறியது.
இதற்கான ஆதாரங்களைத் திரட்டியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்புக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வீடு, உடைமைகளை இழந்த காஸா மக்கள் அளித்த பேட்டி, செயற்கைக்கோள்களிடமிருந்து கிடைத்த படங்கள், பொதுமக்கள் அளித்த புகார் ஆகியவற்றைக் கொண்டு இந்த 172 பக்கங்களைக் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்புக் குழுவின் ஆய்வாளர் நாடியா ஹார்ட்மன் தெரிவித்தார்.
பேட்டிகளும், தகவல் சேகரிப்பும் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
காஸா மக்களின் நலன் கருதி அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் கூறும்போது ஆயுதம் ஏந்திய போராளிகளைக் காரணம் காட்டி அப்பாவி மக்களை அவர்களது இருப்பிடத்திலிருந்து வெளியேறச் சொல்வது நியாயமன்று என்று திருவாட்டி ஹார்ட்மன் தெரிவித்தார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தைப் பொறுத்தவரை, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிலவரப்படி ஏறத்தாழ 1.9 மில்லியன் பாலஸ்தீனர்கள் காஸாவில் உள்ள தங்கள் வீடு, உடைமைகளை இழந்து வேறு இடங்களில் அடைக்கலம் நாடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காஸாவில் பல பகுதிகளில் இனி மனிதர்கள் வாழ முடியாதபடி இஸ்ரேல் அவ்விடங்களை சீர்குலைத்துவிட்டது. சில இடங்களில் இந்தப் பாதிப்பு நிரந்தரமானது. இது இனப் படுகொலைக்குச் சமம்,” என்று மனித உரிமை கண்காணிப்பு மத்தியக் கிழக்குப் பிரிவு செய்தித்தொடர்பாளரான திரு அகமது பென்செம்சி தெரிவித்தார்.