வாஷிங்டன்: சீனாவின் சின்ஜியாங் வட்டாரத்தில் உய்கர் மக்களுக்கும் பிற சிறுபான்மையின மக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் கட்டாய உழைப்பு நடவடிக்கைகளுக்கு உதவியதாகக் கூறி, ‘பிஜிஐ ஜெனோமிக்ஸ்’, ‘எம்ஜிஐ டெக்’, ‘ஷென்சென் பிஜிஐ டெக்னாலஜி’ ஆகிய மூன்று மரபணு நிறுவனங்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
சின்ஜியாங்கில் கட்டாய உழைப்புமூலம் தயாரிக்கப்படவில்லை என்பதை ஏற்றுமதியாளர்கள் நிரூபிக்கும் வரை, அந்த நிறுவனங்களின் பொருள்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்கக்கூடாது என்று சுங்கத் துறைக்கு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தங்களது நிறுவனத்தில் யாரையும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதில்லை என்றும் அமெரிக்காவில் தங்களுக்கு மிகக் குறைந்த வணிகமே இருப்பதால் இந்த நடவடிக்கை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா-சீனா இடையே நிலவும் வணிகச் சுமுகநிலைக்கு மத்தியில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மரபணுத் தகவல்களைப் பயன்படுத்தி சிறுபான்மையினரைக் கண்காணிக்கவும் ஒடுக்கவும் அந்த நிறுவனங்கள் உதவுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அவற்றையும் சேர்த்து, அமெரிக்காவின் தடைப்பட்டியலில் தற்போது 190 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. பருத்தி, பதப்படுத்தப்பட்ட தக்காளி, மின்னிலக்கப் பொருள்கள், கருவிகள் எனப் பல்வேறு பொருள்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
