டெட்ராய்ட்: அமெரிக்க வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான ஃபோர்டு மோட்டார், ஜெனரல் மோட்டார்ஸ், 2025 ஜனவரியில் அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்கு தலா US$1 மில்லியன் (S$1.3 மி.) நன்கொடை வழங்கவுள்ளன.
அவற்றுடன் சேர்த்து, வாகனங்களையும் அவை பங்களிக்கவுள்ளதாக அந்நிறுவனங்களின் பேச்சாளர்கள் திங்கட்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்தனர்.
டிரம்ப் நிர்வாகத்தால் பரிசீலிக்கப்படும் வரிகள், மின்சார வாகனங்கள் தொடர்பான கொள்கைகள், ஃபோர்டு போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்களைப் பாதிக்கும். மின்சார வாகனத் தயாரிப்பை அதிகப்படுத்தி அவற்றை விற்க ஃபோர்டு தடுமாறி வருகிறது.
மெக்சிகோ, கனடா இரு நாட்டு இறக்குமதிகள் மீது பரந்த அளவிலான வரிகளை விதிக்கவும் ஃபோர்டு நிறுவனத்துக்குப் பயனளிக்கும் மின்சார வாகன வரிச்சலுகையை நிறுத்தவும் டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
இந்த முடிவுகள் குறித்து தமது நிறுவனத்தின் கண்ணோட்டங்களைக் கேட்டறிய டிரம்ப் முன்வருவார் என தாம் நம்புவதாக ஃபோர்டு தலைமை நிர்வாகி ஜிம் ஃபார்லே, டிசம்பரில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமேசான் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் உள்ளிட்ட இதர பெரிய நிறுவனங்களும் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்கு நன்கொடை அளித்துள்ளன.
2017 பதவியேற்பு விழாவுக்காக டிரம்ப் சாதனை அளவாக US$106.7 மில்லியன் திரட்டியிருந்தார்.

