தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலில் ஐவரை கத்தியால் குத்திய ஆடவர் சுட்டுக்கொலை

2 mins read
13c7dfd3-9614-47e5-8c49-29e0514fd6ba
இரவுநேர பொழுதுபோக்கு வீதியில் கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்தது. - படம்: ஏஎஃப்பி

டெல் அவிவ்: இஸ்ரேலின் இரண்டாவது பெரிய நகரான டெல் அவிவ்வில் ஐவரை சரமாரியாகக் கத்தியால் குத்திய வெளிநாட்டு ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த நகரத்தில் உள்ள இரவுநேர பொழுதுபோக்கு வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) சம்பவம் நிகழ்ந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.

“நஹாலாட் பின்யாமின் ஸ்திரீட்டில் பயங்கரவாதி ஒருவர் கண்ணில் கண்டோரை எல்லாரையும் கத்தியால் குத்தத் தொடங்கினார். அதில் ஐவர் படுகாயமடைந்தனர்,” என்று காவல்துறை கூறியது.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அந்த 28 வயது ஆடவரை சுட்டு வீழ்த்தியதாகவும் அது தெரிவித்தது.

சம்பவம் நிகழ்ந்த வீதியில் அந்த ஆடவரின் சடலத்தை ஏஎஃப்பி புகைப்படக்காரர் கண்டார்.

இதற்கிடையே, கத்திக்குத்துக் காயங்களுடன் மூவர் தனது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களில் ஒருவர் கழுத்தில் குத்தப்பட்டதால் அவரது நிலை மோசமாக உள்ளது என்றும் டெல் அவிவ் நகரில் உள்ள இச்சிலாவ் மருத்துவமனை தெரிவித்தது.

அந்தச் சம்பவம் ஒரு தீரச்செயல் என்று பாலஸ்தீன் போராளிக் குழு புகழ்ந்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதை இது உணர்த்துவதாக அந்தக் குழு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

டெல் அவிவ் நகரில் நான்கு நாள்களில் நிகழ்ந்துள்ள இரண்டாவது கத்திக்குத்துச் சம்பவம் இது. ஜனவரி 18ஆம் தேதி நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கடுமையாகக் காயமுற்றார்.

இதற்கிடையே, மேற்குக் கரையில் உள்ள ஜெனின் பகுதியில் இஸ்‌ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதில் பத்து பாலஸ்தீனர்கள் மாண்டதாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதுடன் பேரளவிலான ராணுவ வீரர்களை ஜெனின் நகருக்குள் அனுப்பிவைத்ததாக பாலஸ்தீன ஊடகம் செய்தி வெளியிட்டது.

இஸ்‌ரேலிய ராணுவ வீரர்கள் ஜெனினில் உள்ள அகதி முகாமுக்குள் புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இஸ்‌ரேலிய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக ஆளில்லா வானூர்திகள், ஹெலிகாப்டர்கள், கவசத்துடனான நிலச் சமன் பொறிகள் பயன்படுத்தப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர்.

ஜெனினில் தலைவிரித்தாடும் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்த அதிரடி நடவடிக்கை நடத்தப்பட்டதாக இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்தார்.

காஸா போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து மூன்று நாள்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்