சோல்: தென்கொரியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வேலையிடத் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் 2020ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை மும்முடங்கு அதிகரித்ததாக அரசாங்கத் தரவுகள் சுட்டியுள்ளன.
அந்த அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் மேலோட்டமானவையாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர்.
தென்கொரியாவின் மக்கள் சக்திக் கட்சியின் கிம் வி சாங் வெளியிட்ட மனிதவள அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி வெளிநாட்டு ஊழியர்களைக் குறிவைத்து நடத்தப்படும் வேலையிடப் பகடிவதை, துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்த புகார்கள் கணிசமாக அதிகரித்தன.
2020ஆம் ஆண்டு அத்தகைய 65 புகார்கள் அளிக்கப்பட்டன. கடந்த ஆண்டு புகார்களின் எண்ணிக்கை 225க்குக் கூடியது. அது 3.5 மடங்கு அதிகரிப்பைக் காட்டுவதாகப் புள்ளிவிவரம் சுட்டியது.
இவ்வாண்டு மே மாத நிலவரப்படி ஏற்கெனவே 112 புதிய புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பதிவாகும் புகார்களின் எண்ணிக்கை பெரும்பாலும் அதிகமாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
நான்ஜு நகரில் உள்ள செங்கல் தொழிற்சாலையில் இலங்கை ஊழியர் ஒருவர் பாரந்தூக்கியில் கட்டிவைக்கப்பட்ட சம்பவம் வேலையிடச் சம்பவங்கள்மீது மீண்டும் கவனத்தைக் கொண்டுவந்துள்ளது.
அத்தகைய செயல், வேலையிடத் துன்புறுத்தல் என்று அறிவித்த அதிகாரிகள் தொழிற்சாலையின் முதலாளிக்கு 3 மில்லியன் யுவென் (S$2,700) அபராதம் விதித்தனர்.
தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் இச்சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை என்று கண்டனம் தெரிவித்ததோடு இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
தென்கொரியக் காவல்துறை அதிகாரிகள் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான சம்பவங்களைக் கண்டறிய நாடளவில் 100 நாள் சிறப்புச் சோதனை நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளனர்.