பேங்காக்: தாய்லாந்தில் தவறாக நடந்துகொள்ளும் வெளிநாட்டவரை அந்நாட்டுப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் கண்டித்துப் பேசியுள்ளார்.
சட்டவிரோத வர்த்தகங்கள், சட்டவிரோத நிலப் பயன்பாடு ஆகிய சர்ச்சைகள் தாய்லாந்தில் அண்மைக் காலமாக அதிகம் தலைதூக்கிவருகின்றன. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சுடுகாடு ஒன்றும் அவற்றில் அடங்கும்.
அதுபோன்ற சம்பவங்கள், தாய்லாந்து சட்டத்தை மீறி விருந்துபசரிப்பைத் தவறாகப் பயன்படுத்தி, எல்லையை மீறுபவை என்று திரு அனுட்டின் சாடினார்.
தாய்லாந்தில் ஊறிப்போனதாகக் கூறப்படும் ஊழல் காரணமாக வெளிநாட்டவர் சட்டவிரோத நிலங்களை வைத்திருப்பதற்கு எதிரான அதிருப்தியை திரு அனுட்டினின் அரசாங்கம் எதிர்நோக்குகிறது. பிரச்சினையைக் கையாள அரசாங்கம், சுற்றுப்பயண விசா தேவைப்படாத நாடுகளிலிருந்து வருவோர் அதிகபட்சம் தங்கக்கூடிய காலத்தை 60லிருந்து 30 நாள்களுக்குக் குறைத்துள்ளது. இது, சுற்றுப்பயண விசா தேவைப்படாத பெரும்பாலான நாடுகளுக்குப் பொருந்தும்.
அதோடு, குற்றம் புரியும் வெளிநாட்டவரை விரைவில் நாடுகடத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்களின் போலி உரிமையாளர்களாகத் தாய்லாந்து நாட்டவரைப் ‘பயன்படுத்தும்’ நிறுவனங்கள்மீதான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். தாய்லாந்து மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை வெளிநாட்டவர் வாங்குவதற்கு வகைசெய்யும் குடியுரிமை தொடர்பான விதிமுறைகளைக் கடுமையாக்கப்போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரமாகிவரும் இந்த முறியடிப்பு நடவடிக்கைகள் சீன, பிரெஞ்சு, இந்திய, ரஷ்ய சுற்றுப்பயணிகள் உள்ளிட்டோரைக் குறிவைத்து நடத்தப்பட்டுவருகின்றன. அந்நடவடிக்கைகளை தேசியவாதிகள் உன்னிப்பாகக் கவனித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவரின் தவறான நடத்தை, அதற்கு வழிவிடும் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக தேசியவாதிகள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
