தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாபா மாநில ஆளுநராக முன்னாள் முதல்வர் மூசா அமான் நியமனம்

2 mins read
0fb70141-d765-4a4d-9a83-e6ca6235e3c0
கோலாலம்பூரில் உள்ள மலேசிய மாமன்னரின் அரண்மனையில் டிசம்பர் 17ஆம் தேதி, மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து சாபா ஆளுநருக்கான பதவி நியமனத்தைப் பெற்றுக்கொள்ளும் திரு மூசா அமான் (இடம்). - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவின் சாபா மாநிலத்தின் 11வது ஆளுநராக முன்னாள் முதல்வர் மூசா அமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வரும்.

கோலாலம்பூரில் உள்ள மாமன்னரின் அரண்மனையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) நடைபெற்ற நிகழ்ச்சியில், மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிடமிருந்து பதவி நியமனத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

73 வயதாகும் திரு மூசா, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதாவது 2028ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை சாபா மாநில ஆளுநராகப் பதவி வகிப்பார்.

தற்போதைய ஆளு நர் ஜுஹார் மஹிருதீனின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவுறுகிறது. 2011ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அவர் சாபா மா நில ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

திரு மூசாவின் பதவி நியமன நிகழ்ச்சியில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், துணைப் பிரதமர் ஃபடில்லாஹ் யூசோஃப், சாபா முதல்வர் ஹஜிஜி நூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

1951ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி பிறந்த திரு மூசா, ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.

2003ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி சாபா மாநில முதல்வராகப் பொறுப்பேற்ற அவர், 2018ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி வரை ஐந்து தவணைக்காலத்திற்கு அந்தப் பதவியை வகித்தார். சாபா மாநிலத்தில் ஆக நீண்ட காலம் முதல்வராகப் பதவி வகித்த பெருமை அவரைச் சாரும்.

1994ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை சுங்கை சிபுகா சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றிருந்த திரு மூசா, சாபா மாநில நிதியமைச்சர், முதல்வர் துறை அமைச்சர், பங்ளாதேஷுக்கான மலேசியாவின் கௌரவத் தூதர் போன்ற பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்த சிறப்புக்குரியவர்.

குறிப்புச் சொற்கள்