டெல் அவிவ்: இஸ்ரேலின் முன்னாள் ராணுவத் தளபதியான காடி ஐசன்கோட், நீண்டகாலமாக அந்நாட்டின் பிரதமராக இருந்துவரும் பெஞ்சமின் நெட்டன்யாகுவை அப்பதவியிலிருந்து அகற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
பிரதமர் நாற்காலியைக் கைப்பற்றும் நோக்கில் அவர் தமது தேர்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 30) அதிகாரபூர்வமாகத் தொடங்கினார்.
இஸ்ரேல் பொதுத்தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ளன.
இந்நிலையில், தமது முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஐசன்கோட், “இஸ்ரேல் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கத் தகுதியானது. நாம் அதை இணைந்து எழுதுவோம். இஸ்ரேலின் எதிர்காலத்திற்காக, வரும் அக்டோபரில் இந்த ‘அக்டோபர் 7’ அரசாங்கம் தனது வரலாற்றுக் கடமையை முடித்துக்கொள்வதை நாம் உறுதிசெய்ய வேண்டும்,” என்று, 2023 ஹமாஸ் தாக்குதலைக் குறிப்பிட்டு நெட்டன்யாகு அரசை விமர்சித்தார்.
காஸா போரின்போது நெட்டன்யாகுவின் செயல்பாடுகளைக் கடுமையாக எதிர்த்த 66 வயது ஐசன்கோட், 2023 செப்டம்பரில் ‘யாஷர்’ (Yashar) என்ற கட்சியைத் தொடங்கினார்.
அண்மைய கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 120 இடங்களில் ஐசன்கோட்டின் கட்சி 22 இடங்களையும், நெட்டன்யாகுவின் லிக்குட் கட்சி 24 இடங்களையும் பிடிக்கும் எனத் தெரியவந்துள்ளது.
மொராக்கோ யூதக் குடியேறிகளின் மகனான ஐசன்கோட்டிற்கு மக்களிடம் பேராதரவு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, காஸா போரில் இவரது மகனும் இரு மருமகன்களும் உயிரிழந்தது மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
“இஸ்ரேலுக்கு நேர்மையான, கண்ணியமான தலைமை தேவை. தொலைநோக்குப் பார்வையும் உத்தியும் இல்லாத, நாட்டைத் திசைமாறச் செய்யும் தற்போதைய ஆட்சியை நாம் மாற்றுவோம்,” என்று திரு ஐசன்கோட் முழங்கினார்.

