அரசியலில் மீண்டும் களமிறங்கும் மலேசிய முன்னாள் சட்ட அமைச்சர்

அரசியலில் மீண்டும் களமிறங்கும் மலேசிய முன்னாள் சட்ட அமைச்சர்

2 mins read
d9ef168e-89f4-4bf4-92c0-4f91d927f110
மலேசியாவின் முன்னாள் சட்ட அமைச்சர் சாயிட் இப்ராகிம் பாஸ் கட்சியில் இணைந்துள்ளார். - படம்: த ஸ்டார்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் சட்ட அமைச்சர் சாயிட் இப்ராகிம், அரசியலில் மீண்டும் களமிறங்குவதற்கான விருப்பத்தை முன்வைத்துள்ளார்.

பாஸ் கட்சியில் இணைந்துள்ள அவர், மலேசியாவின் 16வது பொதுத் தேர்தலில் போட்டியிட நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார்.

இம்மாதம் 13ஆம் தேதி, நெகிரி செம்பிலானின் சிராம்பானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது பாஸ் கட்சியின் 15 புதுமுகங்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்களில் திரு சாயிட்டும் ஒருவர்.

பிரபல வழக்கறிஞரான அவர், வெவ்வேறு கட்சிகளில் இணைந்தவர் என்றும் அறியப்படுகிறார். 2000ஆம் ஆண்டில் அம்னோவில் சேர்ந்த திரு சாயிட், 2008ஆம் ஆண்டு கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.

பின்னர், 2009ஆம் ஆண்டு பிகேஆர் கட்சியில் சேர்ந்து அடுத்த ஆண்டே அங்கிருந்தும் அவர் வெளியேறினார்.

அதையடுத்து, கிலாந்தானை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட ‘அகிம்’ என்ற சிறிய கட்சியைப் பல இன தேசியக் கட்சியாக 2010ஆம் ஆண்டு திரு சாயிட் மாற்றினார்.

கட்சிக்குள் ஏற்பட்ட பூசல் காரணமாக 2012ஆம் ஆண்டு கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகி தன்னிச்சையான அரசியல் பிரமுகராக அவர் செயல்பட்டார்.

பின்னர், 2017ஆம் ஆண்டு ஜனநாயகச் செயல் கட்சியில் இணைந்த சாயிட், 2020ஆம் ஆண்டு அங்கிருந்தும் விலகினார்.

சாமான்ய மலேசியர்களின் நலனுக்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறிய சாயிட், பாகுபாடின்றி அனைவருக்கும் நியாயம் கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

எனினும், பல்வேறு கட்சிகளுக்குத் தாவிய திரு சாயிட்டைப் பலரும் குறைகூறியுள்ளனர். ஆனால், சீர்த்திருத்தத்தில் உறுதியாக உள்ள தளத்துக்கான நாட்டமே தமது அரசியல் பாதைக்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

“இப்போது நான் பாஸ் கட்சியின் உறுப்பினராக இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்குவேன் என்று நம்பிக்கை இருக்கிறது,” என்றார் அவர்.

தமக்குக் கிடைத்த வாய்ப்பை வரவேற்பதாகச் சொன்ன அவர், நாட்டுக்குத் தொடர்ந்து பங்காற்ற முடியும் என்று நம்புவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்
தலைவர்கட்சிபிகேஆர்அரசியல்மலேசியா