பெண்ணுடன் தனித்திருந்ததற்காக மன்னிப்பு கோரிய முன்னாள் மலேசிய அமைச்சர்

பெண்ணுடன் தனித்திருந்ததற்காக மன்னிப்பு கோரிய முன்னாள் மலேசிய அமைச்சர்

படம்: மலேசியாவின் இயற்கை வளங்கள், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சு

17 Oct 2026 - 5:36 pm

2 mins read

பெட்டாலிங் ஜெயா: பெண் ஒருவருடன் தனித்திருந்ததற்காக சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையினரால் கைது செய்யப்பட்ட இருவரில் தாமும் ஒருவர் என்பதை மலேசியாவின் முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது உறுதிப்படுத்தியுள்ளார்.

‘பார்ட்டி பெர்சாமா மலேசியா’ கட்சியின் தலைவரான நிக் நஸ்மி, வியாழக்கிழமையன்று (அக்டோபர் 15) பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவருடன் இருந்ததாகத் தெரிவித்தார்.

திட்டம் தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்வதற்காகவே அங்கு சென்றதாக அவர் கூறினார்.

“நாங்கள் தொடக்கத்தில் கோலாலம்பூரின் பிரிக்ஃப்பீல்ஸ் பகுதியில் உள்ள ஓர் அரங்கத்தில் நண்பர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினோம். பின்னர் திட்டம் சார்ந்த சில ஆவணங்களைப் பார்வையிடுவதற்காகப் பெட்டாலிங் ஜெயாவுக்குச் சென்றோம். அப்போது அதிகாரிகள் அங்கு வந்தவேளையில், நானும் அந்தப் பெண்ணும் மட்டுமே அங்கிருந்தோம். இது ஒரு தவறான செயல் என்பதை ஒப்புக்கொள்கிறேன்,” என்று சனிக்கிழமை (அக்டோபர் 17) வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் தவறான செயலில் ஈடுபடவில்லை. இதையே அதிகாரிகளிடமும் கூறினேன்,” எனத் திரு நிக் நஸ்மி சுட்டிக்காட்டினார்.

தமது ‘தவறான முடிவால் பாதிக்கப்பட்ட தமது மனைவி, இரு குடும்பத்தினர் மற்றும் பிறரிடம் நிக் நஸ்மி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அத்துடன், ‘பெர்சாமா’ கட்சியின் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் ஏமாற்றமடையச் செய்துவிட்டதாகக் கூறி கட்சியினிரிடமும் மன்னிப்புக் கோரினார்.

கட்சி எடுக்கும் எந்த முடிவையும் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்துச் சட்ட நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறிய அவர், ஊடகங்கள் மூலம் விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல் அனைவரும் சட்ட நடைமுறைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்