கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் புதன்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்துள்ளது.
அவரின் மனைவி சித்தி ஹஸ்மா முகம்மது அலி கடந்த திங்கட்கிழமை காலமானார்.
மகாதீர், 101, கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் எதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
டாக்டர் மகாதீரின் மகன் மொக்ஸானி, தம் தந்தையாரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்றும் சொன்னார்.
“மருத்துவக் கண்காணிப்புக்காக அவர் தேசிய இதய நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்,” என்று திரு மொக்ஸானி, பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“கடந்த இரண்டு நாள்கள் அவருக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தன. தற்போது அவர் நலமாக உள்ளார், கவலைப்படும்படியாக எதுவும் இல்லை,” என்றார் திரு மொக்ஸானி.
மலேசியாவின் பிரதமராக 20 ஆண்டுகளுக்கும் மேல் சேவையாற்றியவர் டாக்டர் மகாதீர். ஏற்கெனவே இதயப் பிரச்சினைகள் இருந்ததோடு, அவருக்கு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன.
அண்மை ஆண்டுகளில் அவர் பலமுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்; இவ்வாண்டு ஜனவரி மாதம் கீழே விழுந்ததில் டாக்டர் மகாதீருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது.
மருத்துவரும் பொது சுகாதார ஆதரவாளருமான அவரது மனைவி சித்தி ஹஸ்மா, அவருடன் 70 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், செப்டம்பர் 28ஆம் தேதி தமது 100வது வயதில் காலமானார்.
மலேசியாவின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமரான டாக்டர் மகாதீரை அவர் 1956ஆம் ஆண்டு மணந்தார். இந்தத் தம்பதியருக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர்.
மோட்டார் நாற்காலியைப் பயன்படுத்தியபடியும் பிராண வாயு குழாய் பொருத்தப்பட்ட நிலையிலும் காணப்பட்ட டாக்டர் மகாதீர், மனைவியின் இறுதிச்சடங்கின்போது மிகவும் துயரத்தில் மூழ்கியிருந்தார்.
