கடந்த 2015ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் உருகுவே நாட்டிலிருந்து கலந்துகொண்ட ஷெரிக்கா டி அர்மாஸ் கடந்த வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 26.
சென்ற ஈராண்டுகளாக ஷெரிக்கா கருப்பைவாய்ப் புற்றுநோயுடன் போராடி வந்ததாக ‘நியூயார்க் போஸ்ட்’ செய்தி குறிப்பிட்டுள்ளது.
ஷெரிக்காவின் திடீர் மறைவு, அனைத்துலக அழகிப் போட்டிச் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலக அழகிப் போட்டியை நோக்கிய இவரது பயணம், குறிக்கோள், கருணை, மனவுறுதிமிக்க பயணம் எனச் சொல்லப்படுகிறது.
உலக அழகிப் போட்டி மேடையில் பங்கேற்று உருகுவே நாட்டிற்குப் பெருமை சேர்த்த இவர், எண்ணற்ற இளம்பெண்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
“நான் எப்போதும் தோன்றெழிலியாகத் (Model) திகழவே ஆசைப்பட்டேன். அது விளம்பர அழகி, ஒய்யார நடையழகி என எப்படி இருந்தாலும் சரி. நவநாகரிகம் சார்ந்தவற்றுடன் தொடர்புடையவராக இருக்க விரும்புகிறேன். எந்தப் பெண்ணுக்கும் ‘அண்ட அழகி’ போட்டியில் பங்கேற்பதுதான் கனவாக இருக்கும். சவால்கள் நிறைந்த இச்சூழலை அனுபவிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி’” என்று தனது ‘உலக அழகிப் போட்டி’ காலகட்டத்தில் ஷெரிக்கா தெரிவித்திருந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்குச் சிகிச்சையளிப்பதில் கடப்பாடு கொண்டிருந்த ‘பெரெஸ் ஸ்கிரமினி’ எனும் அறநிறுவனத்துடனும் இவர் ஈடுபாடு கொண்டிருந்தார்.

