மணிலா: பிலிப்பீன்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த பம்பான் நகரின் முன்னாள் மேயரான அலிஸ் குவோ இந்தோனீசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை பிலிப்பீன்சின் நீதித்துறை செப்டம்பர் மாதம் 4ஆம் தேதியன்று வெளியிட்டது.
சீனாவைச் சேர்ந்த சட்டவிரோத கும்பல்களுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் பிலிப்பீன்சிலிருந்து தப்பிச் சென்ற குவோவை அந்நாட்டு அதிகாரிகள் வலைவீசித் தேடினர்.
அலிஸ் குவோ சீனாவைச் சேர்ந்தவர் என்றும் அவரது இயற்பெயர் குவோ ஹுவா பிங் என்றும் பேசப்படுகிறது.
ஆனால் இதை அவர் மறுத்துள்ளார்.
தாம் பிலிப்பீன்சில் பிறந்து அந்நாட்டு குடியுரிமை பெற்றவர் என்று அவர் அடித்துக் கூறுகிறார்.
தம்மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி இரவு, இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் குவோ கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றங்கள் தொடர்பாக குவோவுடன் சேர்த்து 35 பேர் மீது பிலிப்பீன்ஸ் நீதித்துறை கடந்த மாதம் குற்றம் சுமத்தியது.

