தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே கைது

2 mins read
88b34611-5369-41b2-a3f6-230a2da1644c
திரு டுட்டர்டேயைக் கைது செய்ய மணிலாவின் நினோய் அக்குவினோ அனைத்துலக விமான நிலையத்தில் காத்திருந்த காவல்துறையினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

மணிலா: தனது ஆட்சிக் காலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது மனிதாபிமானக் குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டர்டே கைது செய்யப்பட்டுள்ளார்.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கைதாணை விடுத்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைதாணையைச் செயல்படுத்த இன்டர்போல் எனும் அனைத்துலகக் காவற்படையின் உதவி நாடப்பட்டது. செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) திரு டுட்டர்டே, 79, பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் வந்து இறங்கியவுடன் கைதாணை செயல்படுத்தப்பட்டது.

அவர், தனது கட்சியின் செனட் சபை வேட்பாளர்களுடன் ஹாங்காங்கில் பிரசார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

திரு டுட்டர்டேயைக் கைது செய்ய பிலிப்பீன்ஸ் தேசிய காவற்படை ஒத்துழைத்தது. அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தமது அரசாங்கம் இணங்கிச் செயல்படத் தயார் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் சட்ட திட்டங்களை முன்னதாக நிராகரித்த திரு மார்க்கோசின் தற்போதைய நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டுள்ளது. அந்நீதிமன்றத்துக்குத் தமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்று அவர் முன்பு சாடியிருந்தார்.

எனினும், திரு மார்க்கோசுக்கும் திரு டுட்டர்டே குடும்பத்துக்கும் இடையே அரசியல் ரீதியாக விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் திரு மார்க்கோசின் நிலைப்பாடு மாறியுள்ளது.

திரு மார்க்கோசுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததன் தொடர்பில் திரு டுட்டர்டேயின் மகளும் பிலிப்பீன்ஸ் துணை அதிபருமான சாரா டுட்டர்டே மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சாரா டுட்டர்டே மில்லியன் கணக்கிலான அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து திரு டுட்டர்டே, அண்மைக் காலமாகத் தனது பிரசார உரைகளில் திரு மார்க்கோசைப் பெரிய அளவில் தாக்கிப் பேசியுள்ளார். திரு மார்க்கோஸ் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் போன்ற குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

அவற்றை திரு மார்க்கோஸ் பலமுறை மறுத்து வந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்