கோலாலம்பூர்: மலேசிய இந்திய காங்கரசின் (மஇகா) முன்னாள் தலைவர் ஜி. பழனிவேல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலமானார். அவருக்கு வயது 76.
மஇகா உதவித் தலைவர் டி. முருகையாவை, பெர்னாமா தொடர்புகொண்டபோது, முன்னாள் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார் என்பதை உறுதிப்படுத்தினார்.
1949ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, பினாங்கில் பிறந்த பழனிவேல், 1973ஆம் ஆண்டு புஜாங் பள்ளத்தாக்கு திட்டத்திற்கான தேசிய அரும்பொருளகத்தில் ஆராய்ச்சி அதிகாரியாக தமது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் ஏப்ரல் 1977ல் மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவில் மூத்த பத்திரிகையாளராகச் சேர்ந்தார்.
1984ஆம் ஆண்டில், அவர் அந்த நிறுவனத்தில் உள்நாட்டு மற்றும் பொருளாதார செய்திகளுக்கான ஆசிரியராக நியமிக்கப்பட்டார், பின்னர் 1987 முதல் 1990 வரை அப்போதைய பொதுப் பணி அமைச்சராக இருந்த திரு எஸ். சாமிவேலுவின் ஊடகச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1970களின் முற்பகுதியில் இருந்து மஇகா மூலம் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட அவர், 1990ல் முதல் முறையாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.
1990 பொதுத் தேர்தலில் ஹுலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், 2008ஆம் ஆண்டு அந்தத் தொகுதியை இழப்பதற்கு முன்பு தொடர்ந்து நான்கு முறை எம்.பி.யாகப் பணியாற்றினார்.
பின்னர் 2013ஆம் ஆண்டு கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார் என்று பெர்னாமா செய்தி கூறுகிறது.

