சோல்: தென்கொரியாவில் அரசியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல், பொதுமக்கள் முன்னிலையில் விசாரணை நடந்தால் மட்டுமே சிறப்புக் குழுமுன் முன்னிலை ஆகப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 28ஆம் தேதி, சனிக்கிழமை திரு யூன் நீதிமன்றத்தில் காலை 10 மணிக்கு முன்னிலையாவார். இதற்குமுன் நிர்ணயிக்கப்பட்டதைவிட திரு யூன் முன்னதாகவே முன்னிலையாகிறார்.
விசாரணையில் ஒத்துழைக்கத் திரு யூன் தயாராக இருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறினர். இருப்பினும் அநியாயமான நடைமுறைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
விசாரணைக்கான நேரத்தையும் இடத்தையும் பற்றி குற்றச்சாட்டை எதிர்கொள்வோருடன் சிறப்பு மன்றம் உடன்பாட்டை எட்டவேண்டும் என்று வழக்கறிஞர்கள் விவாதித்தனர். திரு யூனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் கண்ணியத்துக்கும் மரியாதை செலுத்தவேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
திரு யூனை விசாரணைக்குப் பொதுமக்கள் முன்னிலையில் அழைத்தது அவரை அவமதிப்பதற்கான முயற்சி என்ற வழக்கறிஞர்கள், அவரைக் கைது செய்ய முற்பட்டதன் மூலம் வேண்டுமென்றே விசாரணைக்கு அவர் வருவதைச் சிரமமாக்கினர் என்றனர்.
இம்மாதம் 25ஆம் தேதி திரு யூன் மீது பயணத் தடை விதிக்கும்படி தனியார் சிறப்பு மன்றம் சட்ட அமைச்சிடம் கோரிக்கை விடுத்தது. திரு யூனைக் கைதுசெய்யும்படி மன்றம் விடுத்த கோரிக்கை பின்னர் நிராகரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி ராணுவச் சட்டத்தை அறிவித்த திரு யூன்மீது கிளர்ச்சியைத் தூண்டியது தன்னலத்திற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.