வீட்டுச்சிறைக்கான அபராதத்தைச் செலுத்தாத முன்னாள் பிரதமர் நஜிப்

வீட்டுச்சிறைக்கான அபராதத்தைச் செலுத்தாத முன்னாள் பிரதமர் நஜிப்

படம்: ராய்ட்டர்ஸ்

01 Nov 2026 - 6:33 pm

2 mins read

கோலாலம்பூர்: வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் எஸ்ஆர்சி இன்டர்னேஷனல் வழக்கில் வழங்கப்பட்ட வீட்டுச் சிறைக்கான 50 மில்லியன் மலேசிய ரிங்கிட் (S$15.7 மில்லியன்) அபராதத் தொகையை மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கால் செலுத்தமுடியவில்லை.

அதனால் அவர் தொடர்ந்து சிறையில் இருக்கவேண்டும். அவருக்கு அந்த வழக்கில் வழங்கப்பட்ட நிபந்தனைகளுடனான மன்னிப்பின்படி, அபராதத் தொகையை செலுத்தினால் அவர் 2028 ஆகஸ்ட் 12ஆம் தேதிவரை வீட்டில் இருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், அவர் இதுவரை அபராதத்தைச் செலுத்தவில்லை என்று தலைமை வழக்கறிஞர் முகம்மது டசுக்கி மொக்தார் கூறினார்.

சினார் ஹாரியான் ஊடகம் வெளியிட்ட விவரங்களின்படி, தலைமைச் சட்ட அலுவலகத் தரவுகள்மூலம் கட்ட வேண்டிய அபராதம் நிலுவையிலேயே உள்ளது என்று தெரிகிறது.

“எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் திரு நஜிப் ரசாக் அபராதத் தொகையை இன்னும் செலுத்தவில்லை என்று தெரிகிறது,” என்று கோத்தா பாருவில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கிவைத்த பிறகு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

அபராதத்தைச் செலுத்த காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும் அதைச் செய்தால்தான் அவர் வீட்டுச் சிறையில் இருக்க முடியும் என்பதையும் அதுவரையில் சிறையில் இருக்கவேண்டும் என்பதையும் திரு முகம்மது டசுக்கி உறுதிப்படுத்தினார்.

கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி, மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், திரு நஜிப் ரசாக்குக்கு நிபந்தனையுடனான மன்னிப்பை வழங்கியிருந்தார்.

அதன்படி, அவர் எஞ்சியுள்ள சிறைத்தண்டனைக் காலத்தை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரையில் வீட்டில் இருந்தபடி நிறைவேற்ற முடியும். அதற்கு அபராதமாக ரிங்கிட் 50 மில்லியன் ரிங்கிட்டை அவர் செலுத்தவேண்டும் என்று அந்த மன்னிப்பின் நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டது.

அந்த மன்னிப்பு வழங்கும் முடிவு, கோலாலம்பூர், லாபுவான், புத்ரா ஜெயா, இஸ்தானா நெகாரா ஆகிய கூட்டரசுப் பகுதிகளின் பொதுமன்னிப்பு வாரியம் நடத்திய 64வது மாநாட்டில் எடுக்கப்பட்டது என்று மலேசியப் பிரதமர் அலுவலகத்தின் சட்டப் பிரிவு விளக்கியது.

குறிப்புச் சொற்கள்