கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகம்மது படாவியின் இறுதிச் சடங்கில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், மலேசிய அமைச்சர்கள், மலேசியாவின் முன்னாள் பிரதமர்கள் மகாதீர் முகம்மது, நஜீப் ரசாக், முகைதீன் யாசின் ஆகியோரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
ஊழல் குற்றம் புரிந்ததற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நஜிப் ரசாக்கிற்குத் திரு அப்துல்லா படாவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சிறையிலிருந்து தற்காலிகமாக வெளியேற அவர் அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறை அதிகாரிகள் சூழ்ந்திருக்க, தேசிய பள்ளிவாசலில் திரு அப்துல்லா படாவியின் நல்லுடலுக்கு நஜிப் மரியாதை செலுத்தினார்
நண்பகல் நேரத்துக்கு முன்னதாக திரங்கானு மாநிலத்தின் மன்னர் சுல்தான் மிஸான் ஸைனால் அபிதீன், தேசிய பள்ளிவாசலில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த திரு அப்துல்லா படாவியின் நல்லுடலுக்கு மரியாதை செலுத்தினார்.
திரு அப்துல்லா படாவி மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தபோது மலேசிய மாமன்னராக சுல்தான் மிஸான் இருந்தார்.
திரு அப்துல்லா படாவி மிகுந்த பொறுமையுடன் அனைத்து விவகாரங்களையும் கையாண்டவர் என்றும் அனைத்துத் தரப்பினரின் வாதங்களைச் செவிசாய்த்த பிறகே முடிவெடுக்கும் நற்குணம் படைத்தவர் என்றும் மலேசியாவின் மின்னிலக்க அமைச்சர் கோபிந்த் சிங் டியோ புகழாரம் சூட்டினார்.
திரு அப்துல்லா படாவியின் முதல் மனைவி திருவாட்டி என்டோன் மஹ்முட் மார்பகப் புற்றுநோய் காரணமாக 2005ஆம் ஆண்டில் காலமானார். இத்தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
2007ஆம் ஆண்டில் திருவாட்டி ஜீன் அப்துல்லாவை திரு அப்துல்லா படாவி கரம் பிடித்தார்.
மலேசியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், திரு அப்துல்லா படாவியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.