உரிமம் இன்றி பத்திர வர்த்தகம் செய்ய உடந்தையாக இருந்ததாக முன்னாள் ஷரியா மன்றத் தலைவர் மீது குற்றச்சாட்டு

உரிமம் இன்றி பத்திர வர்த்தகம் செய்ய உடந்தையாக இருந்ததாக முன்னாள் ஷரியா மன்றத் தலைவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
9cc2decb-cc88-4fe2-93c8-917afd33db7f
62 வயது டாக்டர் முகம்மது தாவூத் பக்கார், நீதிபதி நோர்மா இஸ்மாயில் முன்னிலையில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: தி எட்ஜ் மலேசியா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவின் இஸ்லாமிய நிதித்துறையின் முக்கிய பிரமுகரும் மலேசிய மத்திய வங்கியின் ஷரியா ஆலோசனை மன்றத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் முகம்மது தாவூத் பக்கார் மீது உரிமம் இன்றி பத்திர வர்த்தகம் செய்ய உடந்தையாக இருந்ததாக திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 23) குற்றம் சாட்டப்பட்டது.

‘எனர்ஜி ஈகோ பெர்ஹாட்’ எனும் வர்த்தக நிறுவனத்தின் பிரதிநிதி என்ற முறையில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

62 வயது முகம்மது தாவூத், நீதிபதி நோர்மா இஸ்மாயில் முன்னிலையில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பத்திர வர்த்தகம் செய்வதற்குத் தேவையான ‘மூலதனச் சந்தை சேவைகள் உரிமம்’ கைவசம் இல்லாத ‘AUF MBZ’ என்ற மற்றொரு நிறுவனம், அந்த வர்த்தகத்தை மேற்கொள்ள முகம்மது தாவூத் உடந்தையாக இருந்ததாக அந்தக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குற்றம் ஜூன் 2021 முதல் ஆகஸ்ட் 2023 வரை சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் ரவாங் நகரில் உள்ள ஒரு வணிக முகவரியில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

2007ஆம் ஆண்டு மூலதனச் சந்தை மற்றும் சேவைகள் சட்டத்தின் பிரிவு 58(1)ன் கீழ் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

முகம்மது தாவூத்துக்கு நீதிமன்றம் 50,000 ரிங்கிட் பிணை வழங்கியது.

மேலும், அவர் தமது கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என்றும் மாதம் ஒருமுறை அருகிலுள்ள பத்திர ஆணைய அலுவலகத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு ஏப்ரல் 10ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகுற்றச்சாட்டுவிசாரணை