அரசகுலத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார் தக்சின்

1 mins read
83ab3898-3913-4b49-83e0-d4b865755540
திரு தக்சின் ஷினவாத். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் மீது அரசகுலத்தை அவமதித்ததாக அதிகாரபூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்நாட்டு தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் ஜூன் 18ஆம் தேதி இதைத் தெரிவித்தது.

74 வயதாகும் தக்சின் இவ்வழக்கில் பிணை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு ஊடக நேர்காணல் ஒன்றில் அவர் அரசகுலத்தை அவமதிக்கும் கருத்தைக் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜூன் 18ஆம் தேதி, தாய்லாந்தின் மேலும் மூன்று முக்கிய அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருக்கின்றன. அவற்றில் தாய்லாந்தின் தற்போதைய பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் மீதான வழக்கும் அடங்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தைக் கலைக்கவோ பிரதமர் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கவோ நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தால் போதும் என்ற நிலை இருப்பதை அரசியல் கவனிப்பாளர்கள் சுட்டினர்.

தாய்லாந்து நீதிமன்றங்களின் அதிகார வரம்பை இது காட்டுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கு முன்னர் இது தொடர்பான பதற்றங்களால் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததுண்டு. அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டதுடன் விமான நிலையங்களை மூட நேர்ந்ததுண்டு. ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளும் இடம்பெற்றதுண்டு. இத்தகைய நடவடிக்கைகளால் தாய்லாந்துப் பொருளியல் மிகவும் பாதிக்கப்பட்டது.

நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்படக்கூடும் என்ற கவலையில் தாய்லாந்துப் பங்குச் சந்தை ஏற்கெனவே பாதிப்படைந்துள்ளது.

ஆளுங்கட்சி ஆதரவாளரும் பெரும்பணக்காரருமான திரு தக்சினுக்கு பிணை மறுக்கப்பட்டால் விசாரணைக்கு முன்பே அவர் தடுத்துவைக்கப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்